;
Athirady Tamil News

புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்- மத்திய அரசின் ஆய்வு மையம் தகவல்..!!

0

மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்த ஆய்வு மையத்தில் தலைவர் வினய் நந்தி புதிய கொரோனா தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- புதிய கொரோனா பி.எப்-7 வைரஸ் பற்றி தேவையற்ற தகவல்கள் பரவி உள்ளன. பி.எப்-7 வைரஸ் ஒமைக்ரான் மரபணு மாற்றங்களில் இருந்து உருவான ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரசுக்கு வீரிய சக்தியே கிடையாது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. எனவே இந்தியாவில் இன்னொரு அலை வந்துவிடுமோ என்ற பயம் தேவையில்லை. அலை என்று சொல்லக்கூடாது. அது மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். இந்திய மக்கள் பல்வேறு வகையான வைரஸ்களை எதிர்கொண்டுள்ளனர். அதற்கான தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பெருந்தொற்று தடுப்பாற்றல் இயற்கையாகவே உருவாகி இருக்கிறது. இதனால் நாடுமுழுவதும் மக்கள் நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருக்கிறார்கள். எனவே பி.எப்-7 வைரசால் அதிக பாதிப்பு ஏற்படுமோ என்று பயப்பட தேவையில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் டெல்டா வைரஸ் மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியபோது இந்தியாவில் 90 சதவீத மக்கள் தடுப்பூசியை பெற்றிருந்ததால் டெல்டா வைரசால் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த இயலவில்லை. எனவே பி.எப்-7 வைரஸ் இந்தியாவில் நுழைந்தாலும் மிக எளிதாக நம்மால் சமாளிக்க முடியும். சீனாவில் பெரும்பாலானவர்களிடம் எதிர்ப்பு சக்தி இல்லை. சீனர்கள் வீடுகளில் முடங்கியதாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாததாலும் தற்போதைய வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்டு படாதபாடுபட்டு வருகிறார்கள். நமது நாட்டில் அந்த நிலை இல்லை. இந்தியாவில் பி.எப்-7 வைரஸ் நுழைந்தாலும் அதன் வீரியம் மிக விரைவில் சரிவை சந்திக்கும். தற்போதைய ஆய்வின்படி இந்தியர்களிடம் புதிய வகை கொரோனா பரவினாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே அதன் தாக்கம் இருக்கும். 2 நாட்களில் அதன் அறிகுறிகளும், தாக்கமும் நீங்கி விடும். என்றாலும் ஒவ்வொரு இந்தியரும் முன்எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முக கவசம் அணிந்திருப்பதால் எந்த தாக்கத்தில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும். இந்தியாவில் எந்த வைரஸ் வந்தாலும் எதிர் கொள்ளும் வகையில் சுகாதார கட்டமைப்பு உள்ளது. ஏற்கனவே பி.எப்-7 வைரஸ் கடந்த செப்டம்பர் மாதமே குஜராத்தில் கண்டறியப்பட்டது. ஆனால் அது பரவவில்லை. பி.எப்-7 வைரஸ் இந்தியாவில் இருப்பது 3 மாதங்களுக்கு முன்பே உறுதிபடுத்தப்பட்டாலும் இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக எடுபடவில்லை. எனவே இன்னொரு அலை வந்து விடுமோ என்ற அச்சம் துளி அளவுகூட தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.