;
Athirady Tamil News

புதிய வகை கொரோனா நுரையீரலை விட மூளையை மோசமாக தாக்குமா?

0

சீனாவில் பரவும் ஒமிக்ரானின் புதிய வகை வேரியண்ட்கள் நுரையீரல் உள்பட சுவாச பகுதிகளை தாக்குவதை விட மூளையை குறிவைத்து தாக்கும் என்று செய்திகள் வெளியாகின. சீன ஊடகம் வெளியிட்ட செய்திகளை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி வெளியானது. இந்த சூழலில், இதன் உண்மைத்தன்மை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
உலகில் முதல் முதலாக கொரோனா பரவிய நாடான சீனா, கொரோனாவின் முதல் அலையை கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வெற்றிகரமாக தடுத்து விட்டோம் என்று கூறி வந்தது.

பிற உலக நாடுகள் எல்லாம் நாள் ஒன்றில் ஆயிரம், லட்சங்களில் கொரோனா பரவி வந்த நிலையில்
சீனாவில் மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே பாதிப்பு பதிவாகி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பிற நாடுகளில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், புறப்பட்ட இடத்தில் ஆட்டம் காண வைத்திருக்கிறது கொரோனா

பிஎப் 7 வகை கொரோனா பரவல்
சீனாவில் தற்போது ஒமிக்ரானின் புதிய வகை வேரியண்ட் ஆன பிஎப் 7 வகை கொரோனா பரவல் உள்ளது. இந்த வகை கொரோனா சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்களும் கொந்தளித்ததால் தற்போது கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தி விட்டுள்ளது. சீனாவில் நாள் ஒன்றுக்கு பல லட்சங்களில் கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மீண்டும் கொரோனா பரிசோதனை
எனினும் சீனா அதிகாரப்பூர்வமாக இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. சீனா கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படையாகவும் உடனுக்கு உடன் பகிர வேண்டும் என்று உலக சுகாதார மையம் கூட வலியுறுத்தியுள்ளது. சீனாவில் பரவியிருக்கும் கொரோனா அண்டை நாடுகளுக்கும் பரவி விட்டதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவிலும் சர்வதேச பயணிகளுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நுரையீரலை விட மூளையை தாக்கும்
இதனிடையே, சீனாவில் அதிகம் பரவியிருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ்கள் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் நுரையீரலை விட இந்த வைரஸ் மூளையை தாக்கும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகி வந்தது. இது தொடர்பாக சீனாவின் சவுத் சீனா போஸ்ட் நாளிதழ் வெளியிட்டு இருந்தது. கொரோனா மூன்றாவது அலைக்கு காரணமாக இருந்த ஒமிக்ரான் கொரோனா, மேல் சுவாச அமைப்புகளை குறிவைத்து தாக்கியது.

மூளை வீக்கம், எடை இழப்பு
டெல்டா வகை கொரோனா நுரையீரல் பகுதியில் தாக்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. ஒமிக்ரானின் மாறுபாடு வகையான பிஏ 5 மூளையின் திசுக்கள் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுவதாக செய்திகள் வெளியாகின. மூளையை இந்த பிஏ.5 வகை வேரியண்ட்கள் தாக்குதவன் மூலம் மூளை வீக்கம், எடை இழப்பு மற்றும் மரணம் வரை கூட நிகழலாம் என்று அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டு இருந்தது.

பரவும் தகவல் உண்மையா
ஆனால், இந்த தகவல் தவறானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வெளியிடும் மத்திய அரசின் பிஐபி ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஐபி பேக்ட் செக் டிவிட் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருப்பதாவது:- ஒமிக்ரானின் வகை கொரோனா வைரசில் இருந்து மேம்படும் சப் வேரியண்ட் வகை வைரஸ்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த தகவல்கள் தவறானவை. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் மனிதர்களுக்கு இது பொருந்தும் என்பது நிரூபணம் செய்யப்படவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.