;
Athirady Tamil News

இந்தியா மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் – ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

0

டெல்லியில் நடந்த 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இதில் டிஜிட்டல் நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கிய 22 அரசு நிறுவனங்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, இந்தியா, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் டிஜிட்டல் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு மைல்கல் நிகழ்வான ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும்போது இது மிகவும் பொருத்தமானதாகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா தொடங்கி இருக்கிறது.
இது நிர்வாகத்தையும் மாற்றும்.

மக்களை மையமாக கொண்ட நிர்வாகத்துக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, குறிப்பாக தொற்றுநோய்களின் போது, இது உலகின் பிற பகுதிகளுக்கும் பயனளிக்கிறது. இந்தியா, மென்பொருள் துறையில் தனது சக்தியை நிரூபித்திருப்பதை தொடர்ந்து, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும்.

நாம் நடைமுறையில் உள்ள கொள்கைகளைப் பயன்படுத்தி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளின் உலகளாவிய சக்தியாக நாட்டை நிலைநிறுத்துவதற்கு சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் உள்ளூர்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்க அதைப் பயன்படுத்தும் வகையில், அரசாங்கத் தரவை ஜனநாயகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.