;
Athirady Tamil News

மன்னாரிலுள்ள அரச, தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

0

அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 9 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை மதியம் ஒரு மணியளவில் முன்னெடுத்திருந்தனர்.

அரசாங்கத்தினால் முன்னவைக்கப்பட்டுள்ள வரியானது 6 வீதம் தொடக்கம் 36 வீதமாக உள்ள நிலையில் அதை 6 வீதம் தொடக்கம் 24 வீதமாக குறைக்க கோரியும் வரி அறவிடும் சம்பள எல்லையை ஒரு இலட்சம் தொடக்கம் இரண்டு லட்சம் வரை மட்டுப்படுத்தி வரி அறவிடுமாறு கோரியும் வங்கி ஊழியர்கள் போரட்டத்தை மேற்கொண்டனர்.

வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுனர்கள் நடு வீதியில், நண்பர்களுக்கு வரி சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிசுமை,நியாயமான வரி வேண்டும்,நியாயமற்ற வரி சுமை வேண்டாம் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாரு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் நிறைவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பாதையை நோக்கி வரி சுமைக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.