;
Athirady Tamil News

புயலுக்கு மத்தியில் நிலநடுக்கம் – நியூசிலாந்தை புரட்டிபோடும் இயற்கை சீற்றங்கள்

0

நியூசிலாந்தில் உள்ள வடமேற்கு ஓபல் ஹட் பகுதியில் இருந்து 78 கி.மீயை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

6.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

10 முதல் 20 விநாடிகள் வரை நிலம் அதிர்ந்ததை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். சேதம் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவராத நிலையில், நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை தொடர்பாக எதுவித அறிக்கையும் விடுக்கப்படவில்லை.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே அதிரச் செய்தது.

கட்டடங்கள் உடைந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 40,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் கேப்ரியல் புயலின் தாக்கத்தால் அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் நிலைக்கொண்டிருந்த கேப்ரியல் புயல், ஆக்லாந்தில் கரையை கடந்த போது, மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனை தொடர்ந்து பெய்த கனமழையால், நியூசிலாந்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. மின்சாரம், தொலைதொடர்பு சேவை மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியது.

கடந்த நூறாண்டுகளில் இது போன்ற வெள்ள பாதிப்புகளை நியூசிலாந்து கண்டதில்லை என்று அந்நாட்டு பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை மீண்டும் அச்சமடைய செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.