;
Athirady Tamil News

பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைக்கலாமா? ஆய்வு செய்யக்கோரி துணைவேந்தருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!!

0

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள வேரவில் கிராமத்தில், சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் சாதக, பாதகத் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுத்துமூலக் கோரிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நேற்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக் கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கிளிநொச்சியின் தொன்மம் மிகு பேரூர்களுள் ஒன்றாக விளங்கும் வேரவில் கிராமம் ‘ஈழவூர்’ என சிறப்பித்துச் சொல்லப்படும் அளவிற்கு கிளிநொச்சியின் பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க அடையாளமாக விளங்குகிறது.

கிராஞ்சி கிழக்கு, கிராஞ்சி மேற்கு, மொட்டையன்குளம், பிருந்தாவனம், மதனி குடியிருப்பு, வலைப்பாடு, பொன்னாவெளி, பாலாவி ஆகிய கிராமங்கள் சூழவுள்ள இப்பிரதேசத்தில் 1156 குடும்பங்களைச் சேர்ந்த 4276 இற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடற்புறச்சூழலியல் கொண்ட இப்பிரதேச மக்கள் ஏற்கனவே குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நிலையில், தமது பகுதியில் புதிதாக ஓர் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுமாயின் அது தமது இருப்பைக் கேள்விக்குட்படுத்தக்கூடிய அபாயகரமான சூழலைத் தோற்றுவிக்கும் என்ற இயல்பான அச்சத்திற்கு ஆட்பட்டவர்களாக, அதுபற்றிய தெளிவுபடுத்தல்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ளனர்.

எமது மக்களின் உணர்வுநிலைகளோடு என்றும் ஒருமித்திருக்கும் நிறுவனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தன்சார் சமூகத்தின் இருப்புக்காக ஆற்றக்கூடிய சமூகநலன்சார் பணிகளில் ஒன்றாக இதனைக் கருதி, வேரவில் பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதால் எமது மக்களின் இயல்புவாழ்வில் ஏற்படக்கூடிய குடிநீர் உள்ளிட்ட சூழலியல் இடர்பாடுகள் பற்றிய தெளிவினை ஏற்படுத்துவதற்காக, துறைசார் பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஓர் முழுமையான ஆய்வை மேற்கொள்வதன் மூலம், அப்பிரதேச மக்களுக்கும் எமது சமூகத்துக்கும் இதன் சாதக, பாதக தன்மைகள் குறித்த தெளிவுபடுத்தலை ஏற்படுத்த முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.