;
Athirady Tamil News

எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்… ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து அண்ணாமலை கருத்து!!

0

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜகவையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- இது சட்டப்படிதான் நடந்துள்ளது.

இதற்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லட்சத்தீவு எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்தான் ராகுல் காந்திக்கும் தண்டனை விதிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை என தீர்ப்பு வந்தபிறகு மக்கள் பிரதிநிதி அந்த பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழக்கிறார். ராகுல் காந்தியை பொருத்தவரை, சட்டப்படி சபாநாயகர் தகுதிநீக்க உத்தரவை வெளியிட்டிருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, அதே சட்டம் இந்தியாவின் உச்சபட்ச குடும்பமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் பொருந்தும். சட்டத்தின் அடிப்படையில் 30 நாட்கள் அப்பீலுக்கு அவகாசம் உள்ளது. அவர் அப்பீல் செய்யலாம், நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறலாம். அதற்கான எல்லா நடைமுறைகளும் இருக்கிறது. காங்கிரசைச் சேர்ந்த கபில் சிபல் நேற்று இதுதொடர்பாக விரிவாக பேசியிருந்தார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.