புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு
சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை(6) அன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட் வேளை கடை உரிமையாளரை கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குற்றவாளியாக இனங்கண்ட சம்மாந்துறை நீதவான் நீதிமன்று அவரது பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.
கடந்த 2025 பெப்ரவரி 2 அன்று சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கல்லரிச்சல் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.அத்துடன் சம்பவ தினமன்று கடை உரிமையாளருடன் சங்க ஒன்று கூடலில் ஈடுபட்டவர்கள் தர்க்கம் செய்த நிலையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.
இதற்கமைய சட்ட நடவடிக்கையை தொடர்ந்த சுகாதார தரப்பினர் கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குறித்த உணவு வழங்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின் கடையை மூடிவிட்டு தலைமறைவான வெளி ஊர் கடை உரிமையாளர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கும் மூன்று முறை ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில் இறுதியில் நீதிமன்ற பிடிவிறாந்து (Warrant) மூலம் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.
அத்துடன் தான் நிரபராதி என வாதாட முற்பட்ட போதிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினரின் வலுவான சாட்சியங்கள் மற்றும் அனுபவ ரீதியிலான சட்ட வாதங்களின் அடிப்படையில் அவரால் உண்மையை மறைக்க முடியாமல் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் குற்றவாளியின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு நிறைவு செய்யப்பட்டது.
