;
Athirady Tamil News

பணவீக்கத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்- அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லல்படும் மக்கள்!!

0

நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலானது. அந்த நாட்டு மக்கள் இன்னும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும், இலங்கையின் அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானின் பொருளாதாரம் பலவீனமாக காணப்பட்டது.

இப்படியான சூழலில் கொரோனா பெருந்தொற்றும், ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய பெரு வெள்ளமும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றது. அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்துபோகும் நிலையில் உள்ளதால் நாடு திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பின் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.288 ஆக உள்ளது.

இதனால் அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டுமல்லாது அனைத்துப் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக உணவுபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மக்கள் ரமலான் மாதத்தை கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இப்தாரின் போது பழங்களை சாப்பிடுவார்கள்.

ஆனால் பழங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு டஜன் வாழைப்பழம் ரூ.450-க்கும், ஒரு கிலோ ஆப்பிள் ரூ.400க்கும் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அல்லல்படுகின்றனர். அங்கு கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் மூலம் இலவசமாக கோதுமை மாவு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதை வாங்க மக்கள் முண்டியடித்து கொண்டு செல்லும்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் சோகம் தொடர்கதையாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.