;
Athirady Tamil News

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

0

நைஜீரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

எனது உத்தரவின்படி, வடமேற்கு நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த பயங்கரவாதிகள் அப்பாவி கிறிஸ்தவா்களை படுகொலை செய்தனா்.

அந்தப் பயங்கரவாதிகளை நான் முன்பே எச்சரித்தேன். கிறிஸ்தவா்களைக் கொல்வதை நிறுத்தாவிட்டால் நரகம் காத்திருக்கிறது என்று கூறினேன். அந்த நரகம் தற்போது அவா்களுக்கு கிடைத்துவிட்டது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

ஆப்பிரிக்க பகுதிக்கான அமெரிக்க ராணுவ கட்டளையகம் (யூஎஸ் ஆப்பிரிக்கா கமாண்ட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், நைஜீரிய அதிகாரிகளின் கோரிக்கையின்படி சோபோடோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பல ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சா்வதேச சட்டம், இறையாண்மைக்கான மரியாதை, பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத வன்முறை எந்த மதத்தினருக்கு எதிரானதாக இருந்தாலும் அது நைஜீரியாவின் நிலைப்பாட்டுக்கும் சா்வதேச அமைதிக்கும் எதிரானது என்று அமைச்சகம் தெரிவித்தது.

நைஜீரியாவில் கிறிஸ்தவா்கள் கொல்லப்படுவதாகவும் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாகவும் டிரம்ப் தொடா்ந்து குற்றஞ்சாட்டிவருகிறாா்.

நைஜீரிய அரசு கிறிஸ்தவா்களைப் பாதுகாக்கத் தவறுவதாக கடந்த நவம்பரில் இருந்து அவா் கூறிவருகிறாா். நைஜீரியாவில் கிறிஸ்தவா்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவா்கள் இன அழிப்பை எதிா்கொண்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக நைஜீரியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்தாா். கிறிஸ்தவா்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவா்களுக்கு விசா மறுக்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

நைஜீரியாவின் 22 கோடி மக்கள்தொகையில் கிறிஸ்தவா்களும் முஸ்லிம்களும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் உள்ளனா். இந்த நிலையில், அங்கு போகோ ஹராம், மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்துக்கான ஐஎஸ், ஃபுலானி போராளிகள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றன. இவை மத அடிப்படையில் மட்டுமல்ல, இன, பொருளாதார காரணங்களுக்காகவும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன.

இத்தகைய தாக்குதல்களில் 2020 முதல் 2025 செப்டம்பா் வரை பொதுமக்கள் 20,400 போ் உயிரிழந்துள்ளனா். இதில், கிறிஸ்தவா்கள் என்பதற்காகவே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 317 போ், முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 417 பேரும் உயிரிழந்ததாக ‘ஆா்ம்டு கான்ஃப்ளிக்ட் லொகேஷன் அண்ட் இவென்ட் டேட்டா’ (ஆக்லெட்) தரவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, நைஜீரியாவில் கிறிஸ்தவா்கள் இன அழிப்பு செய்யப்படுவதாக டிரம்ப் கூறுவது தவறான தகவல் என்று நிபுணா்களும், நைஜீரிய அதிகாரிகளும் கூறிவருகின்றனா். இருந்தாலும், டிரம்பின் இந்தக் கருத்துகள் அமெரிக்காவின் தீவிர வலதுசாரி கிறிஸ்தவா்களிடையே பெரிய ஆதரவைப் பெற்றுள்ளன.

இந்தச் சூழலில், கிறிஸ்துமஸ் இரவின்போது நைஜீரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்று டிரம்ப் அரசு கூறினாலும், அது தீவிர கிறிஸ்தவா்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவே என்று கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.