நீ வேணாம்.. பாட்டிக்கிட்ட போறேன்.. அம்மாவை பற்றி புகார் சொல்ல 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்!!
சீனாவில் அம்மாவிடம் சண்டை போட்ட சிறுவன் ஒருவன் தனது பாட்டியை காண சுமார் 130 கி.மீ தொலைவுக்கு சைக்கிளில் பயணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவு முறைகளில் தாத்தா-பாட்டி கொஞ்சம் ஸ்பெஷல்தான். அப்பா அம்மாக்களை போல தாத்தா பாட்டிகள் எப்போதும் சிடு சிடுவென இருப்பதில்லை. எனவே வழக்கமாக தாத்தா-பாட்டிகள் மீதான பாசம் குழந்தைகளுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். இந்த பாசம் எதை வேண்டுமானாலும் செய்ய தூண்டும். அப்படியொரு பாச போராட்டம்தான் சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் அம்மாவுடன் சண்டை போட்டிருக்கிறான். சண்டையின் போது “நீ உன் பாட்டி வீட்டுக்கே போய்விடு” என்று அம்மா திட்டியிருக்கிறார்.
இதனையடுத்து மனமுடைந்த சிறுவன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பாட்டி வீட்டுக்கு புறப்பட்டிருக்கிறான். இதில் சோகம் என்னவெனில் பாட்டி வீடு பக்கத்து தெருவிலோ, பக்கத்து ஊரிலோ கிடையாது. பாட்டி வீடு ‘மெய்ஜி ஆங்’ எனும் டவுனில் இருக்கிறது. சிறுவன் இருக்கும் ஹாங்சோ மாகாணத்திலிருந்து ‘மெய்ஜி ஆங்’ டவுன் சுமார் 60 கி.மீ தொலைவில் இருக்கிறது. நடந்து போனால் 14 மணி நேரம் ஆகும். எனவே சிறுவன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறான்.
ஹாங்சொ மாகாணத்திலிருந்து குயான்டாங் நதியை சிறுவன் கடந்திருக்கிறான். இதுவரை எல்லாம் சரியாகதான் சென்றுக்கொண்டிருந்துள்ளது. ஆனால், இடையில் சிறுவன் வழி தவறியுள்ளான். இதனால் 60 கி.மீ தொலைவுக்கு பதில் 130 கி.மீ தொலைவு வரை கடந்துள்ளான். கடைசியாக தனது பையிலிருந்த பிஸ்கெட் மற்றும் தண்ணீர் தீர்ந்துபோன நிலையில், ஒரு நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சிறுவன் சைக்கிளுடன் தனியாக நின்றுக்கொண்டிருந்துள்ளான். இதனை பார்த்த சக பயணிகள் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் சிறுவன் சரியாக பதிலளிக்கவில்லை.
உடல் முழுவதும் சோர்ந்து போய் தனது பாட்டியின் பெயரையும், ஊரையும் மட்டும் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறான். இதனையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சிறுவனை மீட்ட போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிறுவனால் எதையும் சரியாக சொல்ல முடியவில்லை. எனுவே காவலர்கள் சிறுவனின் சைக்கிளை ஜீப்பில் ஏற்றி, சிறுவனையும் உடன் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து சிறுவனுக்கு தண்ணீர் மற்றும் உணவை கொடுத்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் சிறுவன் ஓய்வெடுத்துள்ளான்.
ஓய்வுக்கு பிறகு சிறுவனிடம் விசாரித்ததில் தான் ஹாங்சோ மாகாணத்திலிருந்து வருவதாகவும், வீட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக அம்மா தன்னை பாட்டி வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள் என்றும், எனவே பாட்டி வீட்டுக்கு சைக்கிளில் சென்றதாகவும் சிறுவன் கூறியுள்ளான். ஆனால் வழியில் இருந்த அறிவிப்பு பலகைகளை பார்க்காமல் விட்டதால் வழி தவறிவிட்டதாகவும் சிறுவன் கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவனின் தாய்க்கு காவல்துறையினர் அழைப்பு விடுத்தனர். பின்னர் சிறுவனின் தாய் மற்றும் பாட்டி என இருவரும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். நடந்த சம்பவத்தை விளக்கி கூறிய காவல் துறையினர் சிறுவனிடம் இது போன்று நடந்துக்கொள்ள கூடாது என்றும், இனி இது போன்று நடந்துக்கொண்டால் பெற்றோர்களான உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினருடன் சிறுவனை செல்ல அனுமதித்துள்ளனர். குடும்ப சண்டை காரணமாக பாட்டியை காண 11 வயது சிறுவன் சுமார் 130 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்துள்ள சம்பவம் சீனாவில் பேசுபொருளாகியுள்ளது.