;
Athirady Tamil News

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது-இலத்திரனியல் தராசு, மோட்டார் சைக்கிள் மீட்பு

0

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (02) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இளைஞர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகச் சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்,மோட்டார் சைக்கிள்,கைப்பேசி ,இலத்திரனியல் தராசு (Electronic Scale)என்பன சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அதிபர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன்  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.