;
Athirady Tamil News

உண்மைக்காக நடைபெறும் போர்தான் கர்நாடக தேர்தல்: பிரியங்கா காந்தி!!

0

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்டம் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடமாகும். ரம்பாபுரி மற்றும் சாரதம்மன் கோவில்களுக்கு எனது தந்தை ராஜீவ்காந்தி வந்து சென்றுள்ளார். எனது சகோதரர் ராகுல்காந்தியும் இங்கு வந்து சென்றிருக்கிறார். எனது பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த இந்த மண்ணில் என்னுடைய அண்ணன் ராகுல்காந்திக்கும் நல்லது நடக்க வேண்டும். இந்த வேண்டுதலை நான் கடவுளிடம் கேட்டிருக்கிறேன். கர்நாடகாவில் பா.ஜனதா அரசு இதுவரை பொதுமக்களுக்கு ஒரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை. அதுபோல் மத்திய அரசு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி எந்தவொரு வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை. ஒரு காலத்தில் எனது பாட்டி இந்திரா காந்தியையும் மத்திய அரசு இதுபோல் பாராளுமன்றத்தை விட்டு துரத்தியது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்தது.

எனது அண்ணனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் ஒரே மாதிரியான பொய் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தற்போது எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறுகிறது. எங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள்(மக்கள்) குடும்பமும் தான். இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டும் எனது அண்ணனும், நீங்களும்(மக்கள்) வெற்றி காண வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது. நாங்கள் கடவுள் ஆசியுடன் உண்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுகிறோம். 1978-ம் ஆண்டு எனது பாட்டி இந்திரா காந்தியும், எங்கள் குடும்பமும் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியது. அப்போது அவருடன் சிக்கமகளூரு மக்கள் துணை நின்றனர். அவசர சட்ட காலத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் எனது பாட்டி இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார்.

அதையடுத்து தான் அவர் சிக்கமகளூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 77 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அதற்காக இந்த தருணத்தில் எங்கள் குடும்பத்தின் 3 தலைமுறையினர் சார்பில் முழுமனதுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொய் வழக்கை முறியடித்து எனது பாட்டி இந்திரா காந்தி மீண்டும் பாராளுமன்றத்துக்கு சென்றதுபோல் எனது அண்ணன் ராகுல் காந்திக்கும் நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். ராகுல் காந்தியும், எங்களது மொத்த குடும்பமும் இந்நாட்டு மக்கள் எங்கள் பின்னால் நிற்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். கர்நாடக தேர்தல் உண்மைக்காக நடைபெறும் போர் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.