;
Athirady Tamil News

ஐதராபாத்தில் கொடூரம்- பெண்ணை கொன்று 6 துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்தவர் கைது!!

0

டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சாரதா என்ற பெண்ணின் கொலை, நாட்டையே உலுக்கியது. அவருடன் சேர்ந்து வாழ்ந்த சமையற்கலை நிபுணர் அப்தாப் பூனவல்லா என்பவர், சாரதாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் ஆங்காங்கே வீசினார். இந்த கொலையை நினைவுபடுத்தும்வகையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. அங்குள்ள முசி ஆற்றங்கரையில் நடைபாதையில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெண்ணின் தலை கைப்பற்றப்பட்டது. அவர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தும், காணாமல் போனவர்கள் பட்டியலை ஒப்பிட்டும் கொலையாளியை நெருங்கினர். அவர் பெயர் சந்திரமோகன் (வயது 48). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார். ஐதராபாத்தில் சைதன்யபுரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி (55). வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் பணியாற்றி வந்தார். சைதன்யபுரியில், சந்திரமோகனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது திடுக்கிட்டனர். அனுராதா ரெட்டியின் தலையற்ற உடல், பாலிதீன் கவரில் சுற்றப்பட்டு, ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. அப்புறப்படுத்த தயார்நிலையில் இருப்பது தெரிய வந்தது. அனுராதா ரெட்டியின் துண்டிக்கப்பட்ட 2 கால்கள், 2 கைகள் ஆகியவை பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தன. வாசனை திரவிய பாட்டில்கள், பினாயில், டெட்டால், கல் உடைக்கும் கருவி ஆகியவையும் பிரிட்ஜில் இருந்தன. கைதான சந்திரமோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை நடந்தது எப்படி என்பது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ருபேஷ் கூறியதாவது:- கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து அனுராதா ரெட்டியிடம் சிறிது சிறிதாக ரூ.7 லட்சம்வரை சந்திரமோகன் கடன் வாங்கி இருந்தார்.

அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அந்த பணத்தை திருப்பித்தருமாறு அனுராதா ரெட்டி வற்புறுத்தி வந்தார். சந்திரமோகனால் கொடுக்க முடியவில்லை. எனவே, அனுராதா ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டார். உடலை அப்புறப்படுத்துவது எப்படி என்று ‘கூகுள்’ பார்த்து தெரிந்து கொண்டார். உடலை துண்டு போட என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்றும் ஆய்வு செய்தார். கடந்த 15-ந் தேதி அனுராதா ரெட்டி வீட்டுக்கு சென்ற சந்திரமோகன், அவரது நெஞ்சிலும், வயிற்றிலும் குத்தி கொலை செய்தார். பின்னர், அனுராதாவின் தலையை துண்டித்தார். உடலை 6 துண்டுகளாக வெட்டினார். டெல்லி சாரதா கொலையில், உடல் பாகங்கள் இரவு நேரங்களில் நகரம் முழுவதும் வீசப்பட்டதுபோல், நாள்தோறும் ஒரு பாகத்தை வீசி எறிய சந்திரமோகன் திட்டமிட்டார்.

முதலில், கடந்த 17-ந்தேதி, தலையை மட்டும் முசி ஆற்றங்கரையில் வீசிவிட்டு, ஒன்றுமே நடக்காததுபோல் வீட்டுக்கு திரும்பி வந்தார். மற்ற உடல் பாகங்களை பிரிட்ஜ்க்குள் வைத்திருந்தார். அதிலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக, தினந்தோறும் வாசனை திரவியங்களை அடித்து வந்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று, அனுராதா ரெட்டியின் செல்போனை எடுத்து, அப்பெண்ணே அவருடைய நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதுபோல், நாள்தோறும் செய்தி அனுப்பி வந்தார். இதன்மூலம், அனுராதா உயிருடன் இருப்பதுபோல் நம்ப வைத்தார். சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.