;
Athirady Tamil News

ஜெகன்னாதர் ரத யாத்திரை.. பூரி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!!

0

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகன்னாதர் கோயிலின் ரத யாத்திரையில் பங்கேற்க இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திரளாக வருவார்கள். இந்த புனிதமான ரத யாத்திரை, ஒடிசாவில் மட்டுமல்லாது குஜராத், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூரி நகரில் நடைபெறும் ரதயாத்திரையில் பங்கேற்பதற்காக, பக்தர்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்திருக்கின்றனர். மேலும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Powered By VDO.AI பூரியில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 180 படைகள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையர் அமிதாப் தாக்கூர் தெரிவித்தார். பூரி நகருக்கு 125 ரெயில்கள் இயக்கப்படும் என்றும், டிரோன்கள் உள்ளடக்கிய ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருப்பதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

“பூரி நகரில் நிகழும் இந்த புனிதமான தேர் திருவிழாவிற்காக, ஜெகன்னாதர், தேவி சுபத்ரா, மற்றும் ஸ்ரீ பாலபத்ரர் ஆகிய கடவுள்களின் தேர்களை ஸ்ரீ குண்ச்சா கோயில் வரை வடம் பிடித்து இழுக்கும் சேவையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருக்கிறார். “பூரியின் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பார்கள். மேலும் எந்தவொரு சுகாதார அவசரநிலைக்கும் பசுமை வழித்தடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று மாநில தலைமைச் செயலாளர் பி.கே. ஜெனா கூறியிருக்கிறார். ஒடிசாவின் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்னா, மாநிலத்தின் பல அமைச்சர்கள், ஆகியோர் இந்த புனித ரத யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். சமீபத்திய “மன் கி பாத்” வானொலி உரையில் பிரதமர் மோடி பூரி ரத யாத்திரை ஒரு அதிசயம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பூரி ரத யாத்திரையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் அனைவருக்கும் பூரி ஜெகன்னாதர் அருளால் வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும், வளர்ச்சியும் உண்டாக வேண்டுமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.