;
Athirady Tamil News

சந்திரயான் -3: ராக்கெட்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மட்டும் ஏவப்படுவதற்கு என்ன காரணம்?!!

0

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ள சந்திரயான் -3, நிலவைப் பற்றிய உலக நாடுகளின் ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

40 நாட்கள் பயணத்திற்கு பிறகு நிலவில் தரையிறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ள சந்திரயான்- 3 விண்கலம், நிலவைப் பற்றிய பல்வேறு புதிய தகவல்களை வெளிக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்க, திருவனந்தபுரத்தில் இருக்கும் செயற்கைக்கோள் உற்பத்தி மையம் உட்பட, விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு மையங்கள் நாட்டில் உள்ளன. இருப்பினும் ஒவ்வொரு முறையும் இஸ்ரோ ஏன் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்தே செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது என்ற கேள்வி எழுகிறது. இதற்கான காரணங்களை இங்கு காண்போம்.

விண்வெளி ஆய்வுகளுக்கான ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் உள்ளன.

ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளது. உலக வரைபடத்தில் உள்ள கருப்பு கோடு பூமத்திய ரேகை ஆகும்
பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருப்பது

ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ளது. இதன் பயனாக, இங்கிருந்து ராக்கெட்கள் ஏவப்பட்டால், அவை வினாடிக்கு 0.4 கி.மீ கூடுதல் வேகத்துடன் பயணிக்க முடியும். இதற்காக இஸ்ரோ ஒரு ரூபாய் கூட செலவிட வேண்டியதில்லை. அத்துடன் மணிக்கு 1440 கி.மீ. கூடுதல் வேகத்தை ராக்கெட்டிற்கு அளிக்கும் விதத்தில் இந்தப் பகுதியில் பூமியின் சுழற்சி அமைந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவை போன்று, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பாவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள குரோவ் விண்வெளி நிலையம் ஆகியவையும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன.

சூரியனை பூமி ஒரு மணி நேரத்திற்கு 8000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி பூமி சுழல்கிறது.

ராக்கெட்டும் பூமி சுழலும் திசையில், கிழக்கு நோக்கி ஏவப்பட்டால், பூமியின் சுழற்சி வேகத்தால் ராக்கெட்டின் இயக்கத்துக்கும் கூடுதல் வேகம் கிடைக்கும்.

இதன் காரணமாகவே, உலகின் அனைத்து முக்கிய ராக்கெட் ஏவுதளங்களும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பூமியின் சுழற்சி வேகம், முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பிராந்தியத்தின் அடிப்படையில் இது மாறுபடுகிறது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பூமத்திய ரேகைக்கு மேலே அல்லது அதற்கு சற்று மேலே உள்ள புவிசார் பாதையில் சுற்றி வருகின்றன.

அவை புவியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு பூமியைச் சுற்றி ஒரு நிலையான சுழற்சியில் இருக்க வேண்டும். இதனடிப்படையில், பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் மூலம் செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவது மிகவும் சுலபம். இதனால்தான் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்து ஏவப்படுகின்றன.

மாறாக அவை பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்படுத்தப்பட்டால் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் பின்னர், அவற்றுக்காக ஓர் நிலையான சுற்றுப்பாதையை பராமரிக்க நிறைய ஆற்றலை செலவிட வேண்டி வரும். அத்தகைய சூழலில், சில நேரம் செயற்கைக்கோள் தன் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரவும் கூடும்.

ஸ்ரீஹரிகோட்டா சுமார் 50 கிலோமீட்டர் கடலோரப் பகுதியைக் கொண்டுள்ளது. எனவே ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்தாலும் அதனால் உயிரிழப்பு ஏற்படாது
நீண்ட கிழக்குக் கடற்கரை

ஏவுதளத்திலிருந்து ராக்கெட் புறப்பட்டவுடன் திட்டமிட்டபடி அது நேரடியாக விண்ணில் பயணிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தொழில்நுட்ப காரணங்களால் சில நேரம் ராக்கெட்டுகள் பயணப் பாதையில் இருந்து திசைமாறி விபத்துக்குள்ளாகும்.

அதுபோன்ற தருணத்தில், ராக்கெட் பல துண்டுகளாக சிதறி மக்கள் மீது விழுந்தால் அதன் விளைவாக உயிர்ச்சேதங்கள் ஏற்படக்கூடும். ஆனால் ஸ்ரீஹரிகோட்டா சுற்றுவட்டாரத்தில் பெரிய அளவிலான மக்கள் தொகையோ, வீடுகளோ கிடையாது. தண்ணீரால் சூழப்பட்ட இந்த இடத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் விபத்தில் சிக்க நேர்ந்தால், அவற்றில் இருந்து உடையும் பாகங்கள் கடலில் விழும் என்பதால் உயிர் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்படும்.

இந்தியா பல ஆயிரம் கிலோமீட்டர் நீளமான கடற்கரை பகுதிகளை கொண்டுள்ளது. இவற்றில் வங்காள விரிகுடாவுக்கு அருகே கிழக்குக் கடற்கரை பகுதியில் ஸ்ரீஹரிகோட்டா அமைந்துள்ளது.

ராக்கெட் ஏவுதளத்தைத் தேர்ந்தெடுப்பதில் போக்குவரத்து வசதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன
சாலை மற்றும் நீர் வழிப் போக்குவரத்து

ராக்கெட்டுகளை ஏவுவதற்கு பெரிய அளவிலான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் சிலவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் போக்குவரத்திற்கு ஏற்ற பகுதிகளில் ராக்கெட் ஏவுதளங்கள் அமைக்கப்படுகின்றன.சாலை மற்றும் நீர் வழிப் போக்குவரத்துக்கு உகந்த இடமாக ஸ்ரீஹரிகோட்டா திகழ்கிறது.

ராக்கெட்டுகளை ஏவுவதற்கு அவற்றின் ஏவுதளங்கள் அமைந்துள்ள இடங்களின் காலநிலை மிகவும் முக்கியம். அதிக மழையும் பொழியாத, வெயில் சுட்டெரிக்காத இயல்பான வானிலை நிலவும் பகுதி தான் ராக்கெட் ஏவுவதற்கான உகந்த சூழலாக கருதப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இயல்பான வானிலை நிலவுகிறது.

அதாவது இங்கு அதிக மழையோ, கடுமையான வெயிலோ இல்லாத வானிலை நிலவுகிறது. கனமழை பொழியும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களை தவிர, ஆண்டின் 10 மாதங்களும் ராக்கெட்களை கொண்டு பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உகந்த இடமாக ஸ்ரீஹரிகோட்டா விளங்குகிறது.

அனலை கக்கியபடி பலத்த சத்தத்துடன் ராக்கெட்கள் ஏவப்படும்போது அதன் விளைவாக பூமியில் கடுமையான அதிர்வு ஏற்படுகிறது. இந்த அதிர்வை தாங்கும் சக்தி நிலத்துக்கு இருக்க வேண்டும்.

பாறையுடன்கூடிய மண் கலந்த நிலப்பரப்பில் ஸ்ரீஹரிகோட்டா அமைந்துள்ளதால், ராக்கெட்களால் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் சக்தி இந்த நிலத்துக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.

ஆனால், ஆரம்பத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கான இடங்களின் தேர்வில் ஸ்ரீஹரிகோட்டா இடம்பெறவில்லை. கேரளாவின் தும்பா பகுதியில் தான் விண்வெளி ஆய்வு மற்றும் ஏவுதளம் முதலில் நிறுவப்பட்டது. ஆனால், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பது, வானிலை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் காரணமாக, ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டாவை விட சிறந்த இடம் இந்தியாவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இன்று இந்தியாவின் ‘ராக்கெட் ஏவுதள கோட்டையாக’ ஸ்ரீஹரிகோட்டா திகழ்கிறது.

தொடக்கத்தில் ராக்கெட் ஏவுதளமாக இருந்த தும்பா, பின்னர் முழு அளவிலான ராக்கெட் தயாரிப்பு மையமாக மாறியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.