;
Athirady Tamil News

பத்திரிகை துறையிலும் கால் பதிக்கும் செயற்கை நுண்ணறிவு.. கூகுள் நிறுவனம் பரிசோதனை!!

0

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும். இதற்காக வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது.

இக்கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, தலைப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை மென்பொருள் வழங்கும். இதிலிருந்து ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து விரைவாக தங்கள் பணிகளை முடிக்க முடியும். ஆனால் கட்டுரைகளை உருவாக்குவதிலும், உண்மையை சரிபார்ப்பதிலும் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. ஆகையால் அவர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது. கூகுளின் இந்த முயற்சி தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திடம் பரிசீலிக்கப்பட்ட கூகுளின் ஏஐ கருவி “ஜெனிசிஸ்” என்று அழைக்கப்படுவதாக தெரிகிறது.

முன்னரே சில பதிப்பகங்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளடக்கத்திற்கு (content) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவிகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்களுக்கு விரைவாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு புதிய உள்ளடக்கத்தை உருவாக்க, ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் மென்பொருள் கருவி பயன்படுகிறது. உரைகள், படங்கள், ஒலிகள், அனிமேஷன், முப்பரிமாணம் (3D) அல்லது பிற வடிவங்களில் இவற்றின் உள்ளீடுகள் (inputs) மற்றும் வெளியீடுகள் (outputs) இருக்கும். இருந்தாலும், இது போன்ற மென்பொருள் கருவிகள், உண்மைக்கு புறம்பான தகவலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மனிதர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கும் கணினி நிரல்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறியும் திறனும் இவற்றிற்கு இல்லை.

இக்காரணங்களால் செய்தி வெளியிடும் நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால் கூகுள் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களின் மென்பொருள் கருவிகளில், இத்தகைய பயன்பாட்டு சிக்கல்கள் நீக்கப்படலாம். இதன் மூலம் பதிப்பக துறையிலும், செய்தி துறையிலும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் கூகுளின் முயற்சி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.