;
Athirady Tamil News

’நாட்டை கட்டியெழுப்ப 13 வேண்டும்’ !!

0

நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனின் சாதி, மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை செயற்படுத்த வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

’13இன் மூலம் அதிகாரத்தினை பகிரும் போது நாம் இந்தியாவினை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இந்தியாவானது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அதிகாரங்களை வழங்கவில்லை. சில இடங்களுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. சில மாநிலங்களுக்கு குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என்பது புலனாகின்றது.

வேண்டுமெனின் வடக்கிற்கு சில வருடங்கள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து அதனை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்பதை அவதானிக்கலாம். சரியான முறையில் நிர்வாகம் நடைபெறுமெனின், தேவையான மற்றவர்களுக்கும் அவ்வாறே அதிகாரத்தினை பகிர்ந்தளிக்க முடியும் என்றார்.

சில சந்தர்ப்பங்களில் எமது பக்கத்திலும் தளர்வு கொள்கையினை பின்பற்ற வேண்டும். நாம் இதனை புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு அதனை நாம் புதிய கோணத்தில் நோக்க வேண்டும். அவ்வாறு நோக்குவதால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமெனின், சிறுபான்மையினருக்கு நன்மை ஏற்படுமெனின் இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எமது நாட்டுக்குள் தலையிடாது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

‘அதிகாரப் பகிர்வு குறித்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும். கலந்தாலோசித்து, விவாதித்தே ஒரு நல்ல தீர்மானத்தினை எடுக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது நாட்டினை பிரிப்பதல்ல. அது பொய்யான கூற்றாகும். அத்துடன் தவறான வாதமுமாகும். அப்படியென்றால் அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ள இந்தியாவிற்கு என்ன நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலும் அதிகாரப்பகிர்வே காணப்படுகின்றது. அதுவும் எம்மைப் போன்ற சிறிய நாடாகும். மேலும் பெல்ஜியமும் எம்மை விட சிறிய நாடாகும். அங்கும் கடுமையான அதிகாரப்பகிர்வே காணப்படுகின்றது. எனினும் நாடு பிளவுப்படவில்லை. அந்த நாடுகளில் அதிகாரம் பகிரப்பட்டுள்ள விதம் குறித்த நாம் ஆராய வேண்டும். நாம் அந்த இடத்துக்கு செல்லும் போது அரசியல் முறை, சமூக முறை, பொருளாதார முறை தொடர்பில் ஆழமாக கலந்துரையாட வேண்டும்.

அது தனியாக செய்யும் பணியல்ல. அனைத்து கட்சிகளும் சேர்ந்து செய்ய வேண்டிய செயலாகும். அவ்வாறு செய்வதன் மூலமே அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு அதிகார பகிர்வை நோக்கி செல்லக் கூடியதாக இருக்கும். அவ்வாறானதொரு கூட்டு உருவாகினால் அரசியல் முறைமையில் காணப்படுகின்ற சிக்கலான நிலைமைகளை எமக்கு தீர்த்துக் கொள்ள முடியும். தேவையான புதிய அரசியலமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்கும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.’ என விக்டர் அய்வன் மேலும் தெரிவித்தார்.

ஏதேனுமொரு விடயத்தினை மாற்ற முற்படும் போது அது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் மாத்திரம் கலந்துரையாடி எவ்வித பலனுமில்லை. அதில் பொதுமக்களை குறித்த விடயம் குறித்து அறிவுறுத்துவது மிக முக்கியமான விடயமாகும். அதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் திகழ்கின்றது.
அதே போன்று, இலங்கை வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ள பிரச்சினையானது, அனைவரும் ஒன்றிணைந்து விவாதித்து, அதற்குப் பொருத்தமான வேலைத்திட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு பிரச்சினை என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது. இது அரசாங்கம் மாத்திரம் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையல்ல. ஏனைய அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சினை தொடர்பில் தமது பங்களிப்பினை செலுத்த வேண்டியிருந்தது. இதனை தவறவிட்டிருக்க கூடாது. குறைந்த பட்சம் நாம் தற்போதாவது இதனை அறிவார்ந்த ரீதியில் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்.

சமூக முறையினுள் காணப்பட்ட பிளவுகள், சமய ரீதியிலான பிளவுகள், கலாச்சார ரீதியிலான பிளவுகள் காணப்பட்டன. இந்த பிளவுகள் எதிர்காலத்திற்கு அவசியமற்றது என இந்தியா உணர்ந்து, அதனடிப்படையில் செயற்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்தியா இன்றிருக்கின்ற நிலைக்கு வரக் கூடியதாக இருந்தது.

நாங்கள் இந்தியாவுடன் ஒன்றுசேர்ந்து செயற்பட வேண்டும். உலக வல்லரசு சமநிலையில் எதிர்காலத்தில் இந்தியா முக்கிய இடத்தினை வகிக்கும். அதேபோன்று இந்தியாவுடன் இணைந்து செயற்படும் பட்சத்தில் எமக்கும் முன்னேறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.