;
Athirady Tamil News

மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுத்தோம், இனியும் கொடுப்போம்: அமெரிக்கா திட்டவட்டம்!!

0

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தியாகிகளின் குரல் (Voice of Martyrs) எனும் அமைப்பு, உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை பதிவு செய்து அத்தகைய செயல்கள் நடைபெறும் நாட்டின் அரசாங்கங்களிடம் இவற்றை குறித்து விளக்கங்கள் கேட்க அமெரிக்காவை வலியுறுத்தும். சில நாட்களுக்கு முன், இந்த அமைப்பு, தனது அதிகாரபூர்வ இணையதளமான பெர்ஸிக்யூஷன்.காம் (persecution.com) எனும் தளத்தில் “இந்தியாவில், பிற மதங்களை சேர்ந்தவர்களை தங்கள் மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவர்கள் கடுமையாக துன்புறுத்தப்படுகிறார்கள்” என தகவல் வெளியிட்டிருந்தது. 3 நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7 அன்று இந்தியாவிற்கு வருகை புரிந்து புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் (Matthew Miller) ஜோ பைடனின் இந்திய வருகை மற்றும் மத துன்புறுத்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது:- நாங்கள் மனித உரிமை மீறல் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பும் பேசியிருக்கிறோம். எதிர்காலத்திலும் பேசுவோம்.

மத ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து அமெரிக்கா எப்போதும் குரல் கொடுக்க தயங்காது. கிறித்துவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா உட்பட உலகின் எந்த பகுதியிலும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இனியும் அவ்வாறே எதிர்த்து குரல் கொடுப்போம். இவ்வாறு மேத்யூ தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.