;
Athirady Tamil News

மன்னார் போராட்டத்துக்கு மரியசுரேஸ் ஈஸ்வரி அழைப்பு !!

0

“பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு என்ன வேதனை என புரிந்து கொண்டால் மன்னாரில் இடம்பெறும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்துக்கு அனைவரும் வருவீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் இராணுவத்திடம் கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம்” என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்ச்சியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் போராட்டத்தை மேற்கொண்டு எமது உறவுகள் இதுவரை கிடைக்கவில்லை , எங்களுக்கான நீதி வேண்டும் என சர்வதேசத்துக்கு காட்டி வருகின்றோம்.

இந்த வருடம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை பல மடங்காக எதிர்பார்த்து இருக்கின்றோம். பல்வேறு அழுத்தங்கள், சர்வதேசத்திற்கு குரல் கொடுக்க முடியாத நிலை , சர்வதேசத்திடம் நீதி கேட்க முடியாத நிலைப்பாடு இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியில் இவ்வருடம் எமது உறவுகளை நினைவுகூறி எமது உறவுகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் பலமாக கொண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மன்னார் மாவட்டத்திலே மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

ஏனென்றால் அங்கும் ஓர் புதைகுழி உள்ளது. புதைகுழி தோண்டப்பட்டு சரியான நீதியும் கிடைக்கப்பெறாத பட்சத்தில் இந்த ஆண்டு நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட தரப்பாக நாங்கள் வீதிகளில் நின்று போராடுவது சிலருக்கு வேடிக்கையாகவும் , நகைச்சுவையாகவும் இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயம்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு என்ன வேதனை என புரிந்து கொண்டால் அனைவரும் குறித்த போராட்டத்துக்கு வருவீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் இராணுவத்திடம் கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

பணத்துக்காகவோ, ஆதரவுக்காகவோ இல்லை எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் கண்ணீர் வடித்து கண்ணீருடன் தான் போராடி கொண்டிருக்கின்றோம்.

அனைவரும் சேர்ந்து குறித்த போராட்டத்திற்கு வர வேண்டும் என கேட்பதோடு 30 ஆம் திகதி போராட்டத்திற்கு செல்ல வேண்டிய வாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிலாவத்தை, விசுவமடு , மாங்குளம் ஆகிய இடங்களில் இருந்து காலை 6 மணிக்கு பஸ்கள் புறப்பட உள்ளன.

அத்தோடு குறித்த போராட்டமானது ஓஎம்பி அலுவலகத்திற்கு எதிரான போராட்டமாகும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் இருக்கும் என்பதோடு தேசியத்திற்கு பயணிக்கும் அனைத்து உறவுகளையும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கேட்டு கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.