திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
ஆந்திரம் மாநிலம், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 9 கி.மீ தொலைவில் திருமலையில் உள்ள வடக்கு மாடத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கோவிந்தராஜு சுவாமி கோயில். இது மாவட்டத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய கோயில் வளாகங்களில் ஒன்றாகும். திருப்பதி நகரம் அதைச் சுற்றியே உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் புதன்கிழமை நள்ளிரவு மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவத் தொடங்கியது. இதில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட நிழற்பந்தலும் உடன் சேர்ந்து எரிந்தது.
இதுகுறித்து அருகில் இருந்தோர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஒரு கடை மற்றும் ஒரு கொட்டகை தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே ஏற்பட்ட தீ விபத்து இந்த ஆண்டு கோயில் நகரத்தில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய விபத்தாகும்.
ஜனவரி 8 ஆம் தேதி, வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி 6 பேர் இறந்தனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.