;
Athirady Tamil News

அரசு பள்ளி முதல் ஆதித்யா எல்1 வரை – தடைகளை தகர்த்து சாதனையாளர் ஆன நிகர் ஷாஜி!!

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.

சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட் திட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைபடுத்தி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள். அதில் ஒருவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி. தமிழ்நாட்டின் செங்கோட்டையைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. 59 வயதான இவர் அரசு பள்ளியில் படிப்பை முடித்தார். 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் இடம். 12ம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம்.

பின்னர், திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஷாஜி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எம்.டெக் பட்டம் பெற்றார். விண்வெளி ஆராய்ச்சியில் இருந்த ஆர்வத்தில் இருந்த ஷாஜி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு, பல்வேறு விண்கல திட்டங்களில் தனது பணியை முழு அர்ப்பணிப்போடு செய்து வந்தார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல தட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார். ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக சூரியனின் ஆய்வுக்காக வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நிகர் ஷாஜி இன்று மேடையேறி “கனவு நிறைவேறிவிட்டதாக” பெருமையுடன் கூறினார்.

இதுகுறித்து ஆதித்யா எல்1 வெற்றி குறித்து நிகர் ஷாஜி கூறுகையில், ” நான் எட்டு ஆண்டுகளாக இந்த சிக்கலான திட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இது ஒரு சவாலான திட்டம். ஒளிவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவது பெரும் சவாலாக இருந்தது. இன்று கனவு நிறைவேறிவிட்டது” என்றார். நிகர் ஷாஜியின் கணவர் மெக்கானிக்கல் இன்ஜினியர், துபாயில் பணிபுரிகிறார். மகன் பிஎச்.டி படித்து நெதர்லாந்திலும், மகள் தகுதியான மருத்துவராகவும் முதுகலை படித்து வருகிறார். ஏற்கனவே, சந்திரயான்-2 திட்டத்தில் திட்ட இயக்குநர் எம்.வனிதா மற்றும் மிஷன் இயக்குநர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா ஆகிய இரு பெண்கள் முக்கியப் பங்காற்றினர். இதேபோல் சந்திரயான்-3 திட்டத்திலும் துணை இயக்குனர் கல்பனா முக்கிய பங்கு வகித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.