;
Athirady Tamil News

பிரேரணை தோற்கடிக்கப்படலாம் !!

0

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம் என்றும் ஆனால் தோற்கடிக்கப்படுவது நம்பிக்கையில்லா பிரேரணையை அல்ல, மக்களின் எதிர்பார்ப்பும் அவர்களின் ஆரோக்கியமுமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுகாதார அமைச்சரின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் அப்பாவி மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருந்து பற்றாக்குறை, விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் ,தரமற்ற மருந்து கொள்வனவு ஆகியவற்றால் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மருந்து தட்டுப்பாட்டினால் முக்கிய சிகிச்சைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் நிறுத்தப்படும் போது நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்ல நேரிடும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் வைத்தியசாலைகளுக்கு பொதுமக்களால் எவ்வாறு செல்ல முடியும்,? இதனால் வசதியில்லாதவர்களின் உயிர் ஆபத்துக்குள்ளாகியுள்ளது

அதுமட்டுமன்றி வைத்தியர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருந்து தட்டுப்பாட்டுக்கு மத்தியில் சிறந்த சேவையை வழங்க முடியாது என்பதால் நாட்டை விட்டு வெளியேற வைத்தியர்கள் விரும்புகின்றார்கள். இவ்வாறாக சுகாதார துறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சுகாதார அமைச்சர் தோல்வியடைந்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியங்கள் இல்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறுகின்றார். .சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாக்க ஆளும் தரப்பினர்கள் செயற்படுவார்களாயின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என மக்கள் குறிப்பிடுவது நியாயமானது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.