;
Athirady Tamil News

இரவில் அப்பம், காலையில் தேர்தல்!!

0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையும் முயற்சிக்கு தயாசிறி தடையாக இருந்த காரணத்தால் தயாசிறி கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள் இரவு மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட மைத்திரிபால சிறிசேன உண்மையாக இருக்கவில்லை.

அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கி நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்தார்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கடந்த ஜனவரி மாதம் ஹெலிகொப்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தோம்.

கூட்டணியில் ஒன்றிணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டு விட்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் அவருக்கு நட்டஈடு விதிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணியில் இருந்து விலகினார்.

சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சியை அமைச்சு பதவி வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

இதற்கு கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தடையாக இருந்ததால் தற்போது அவரை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

ஆகவே சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு செயற்பாடாமல் இருந்தால் தான் ஆச்சரியமடைய வேண்டும்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினரை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.