ஈரானை தாக்கியதால் அமெரிக்காவுக்கு எந்தப் பலனும் இல்லை: முதல்முறையாக கமேனி பேச்சு!

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல்முறையாக பொது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த போரானது, 12 ஆம் நாளை எட்டிய நிலையில், ஜூன் 24 ஆம் தேதியன்று இருநாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், போர் தொடங்கியது முதல் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 26) அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் வெளியான விடியோ பதிவில் இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது என கத்தாரிலுள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது அவர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
“ இந்தப் போரில் அமெரிக்காவுக்கு எந்தவொரு பலனும் இல்லை, ஈரான் கொடுத்த பதில் தாக்குதலில் இஸ்ரேல் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்லாமிய குடியரசு வெற்றியடைந்துள்ளது. அவர்களது தாக்குதல்களுக்கு பதிலாக ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.” என அவர் பேசியுள்ளார்.
இத்துடன், இந்தப் போரில் சியோனிச ஆட்சி முற்றிலும் அழிக்கப்படும் என்பதை உணர்ந்ததால் மட்டுமே அமெரிக்கா தலையிட்டது. இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்திலும் நடக்கலாம். அவ்வாறு ஏதேனும் நடந்தால் அதற்கான விளைவுகள் மிகவும் சந்தேகமின்றி மோசமானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.