;
Athirady Tamil News

10 பேரில் ஒருவர் 80 வயதானவர்; குறையும் குழந்தை பிறப்பால் ஜப்பானில் சிக்கல்!!

0

கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.

ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக அந்நாட்டில், 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரியவந்துள்ளது. உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று.

நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மேலே இருப்பதால் பொருளாதாரத்திலும், அதிகரிக்கும் நாட்டின் சமூக பாதுகாப்பிற்கான செலவினங்களிலும் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. 1970 காலகட்டங்களில் 20 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு அந்நாட்டில் கடந்த வருட தரவுகளின்படி 8 லட்சத்திற்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஜப்பானிய நிறுவன பணியிடங்களில் ஊழியர்களுக்கான வேலை பார்க்கும் நேரம் மிக அதிகம். மேலும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவினங்கள் மிக அதிகம்.

இக்காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெற்று கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்தாலும், மக்கள் தயங்குகிறார்கள். ஒரு கட்டமைப்புள்ள சமூகமாக இயங்கும் ஆற்றலை ஜப்பான் இழந்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஃப்யுமியோ கிஷிடா கடந்த ஜனவரியில் தெரிவித்தார். இச்சிக்கலை விரைவாக சரி செய்யும் நடவடிக்கைகளை அந்நாடு எடுக்க வேண்டும் என மனிதவள மேலாண்மை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில், 2021 ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி வயதானவர்களின் ஜனத்தொகை 10.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.