;
Athirady Tamil News

இந்தியா – கனடா மோதலில் அமெரிக்கா யார் பக்கம்? மேற்குலக நாடுகள் கவலை ஏன்?

0

கடந்த ஜுன் மாதம் கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய மோதல் போக்கு இந்தியாவின் சர்வதேச உறவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என மேற்குலக நாடுகள் கவலைப்படுகின்றன. இந்தியாவின் சர்வதேச உறவுகளைப் பேண இந்த நாடுகள் கடுமையாக உழைக்கின்றன.

அமெரிக்காவும் மற்ற மேற்குலக நாடுகளும், இந்தப் பிரச்னையால் தங்களுடனான இந்தியாவின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று தான் கவலைப்படுகின்றன.

உலக அரசியலில் பெரும்பங்கு வகிக்கும் மாபெரும் புவிசார் அரசியல் என்ற புள்ளியில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா ஒரு முக்கியத் தேவையாக விளங்குகிறது.

தற்போதைய நிலையில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தி மட்டுமல்ல – உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்கிறது. உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள இந்தியா, சீனாவுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய அரணாகவும் இருக்கும் என மேற்குலக நாடுகள் பார்க்கின்றன.

யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள், டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, ரஷ்யாவின் படையெடுப்பிற்கு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காத கூட்டறிக்கையை ஏற்றுக்கொண்டது இதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

இந்தக் கூட்டறிக்கையின் மீது சர்ச்சையை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இந்தியாவுடனான தங்கள் உறவைப் பாதுகாக்க இந்நாடுகள் விரும்பின. இது யுக்ரேனில் பல தரப்புக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

மேற்கத்திய ராஜ தந்திரிகளிடையே தற்போது உள்ள மற்றொரு அச்சம் என்னவென்றால், கனடா-இந்தியா விவகாரத்தில் எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவித்தாலும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது தான்.

கனடாவில் வசித்து வந்த சீக்கிய ஆர்வலரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் மேற்கு கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற ஒரு சீக்கிய ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான கசப்புணர்வு இந்த வாரம் கணிசமாக அதிகரித்தது.

குளோபல் சவுத் என அழைக்கப்படும் வளரும் நாடுகளின் தலைவராக இந்தியா தன்னை முன்னிறுத்த கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வருகிறது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போரைக் கண்டிக்க இந்த நாடுகளில் பல மறுத்துவிட்டன.

ஆனால், யுக்ரேன் போரால் இந்நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாடுகளுக்குப் புரியவைக்க அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் உண்மையான பல ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இரண்டு காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான இந்தப் பகை உணர்வு, குளோபல் சவுத் மற்றும் அட்லாண்டிக் பிரதேச சக்திகளுக்கு இடையேயான மோதலாக மாறுவதை மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் விரும்பமாட்டார்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடம் கனடா பிரதமர் ட்ரூடோ இந்த விவகாரத்தை முன்வைத்ததாக கனடா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு கனடாவின் நட்பு நாடுகள் அனைத்தும் அந்நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றன.

கனடாவில் நடந்த படுகொலையில் இந்தியாவுக்கு பங்கிருப்பதாக அந்நாட்டு அரசு எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு “ஆழ்ந்த கவலையை” ஏற்படுத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே நேரம், “கனடாவின் விசாரணை தொடர்வதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது,” என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்ந்துவரும் நிலையில், தற்போதைய விவகாரம் அந்நாடுகளின் உள்ளூர் அரசியலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுகள் நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கு இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி பேசியபோது,”கனடா எழுப்பும் தீவிரமான கவலைகளுக்கு பிரிட்டன் மிகவும் கவனமாக செவி சாய்க்கும்,” என்றார்.

திங்கள் கிழமையன்று கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலியிடம் இது குறித்துப் பேசியதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் “கனடாவின் கவலையை இங்கிலாந்து தீவிரமாக எடுத்துக்கொண்டது,” என்றார்.

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை பிரிட்டன் நிறுத்துமா என்பது குறித்து எந்தப் பதிலையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் கனடாவின் விசாரணை முடிவடையும் வரை இங்கிலாந்து காத்திருக்கும் என்பதுடன், மேலும் தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

“கனடா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இங்கிலாந்தின் மிக நெருங்கிய நண்பர்களாக உள்ளன. அவர்கள் காமன்வெல்த் பங்காளிகள்,” என்று கிளவர்லி மிகவும் கவனமாக கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், கனடாவின் குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு “ஆழ்ந்த கவலையை” ஏற்படுத்தியிருப்பதாகவும், “இந்தியாவின் மூத்த அதிகார மட்டங்களில் ஆஸ்திரேலியாவின் கவலைகளை தெரிவித்ததாகவும்,” கூறினார்.

உலகளாவிய நடைமுறை புவிசார் அரசியலில் இந்தியாவின் தேவையை மேற்குலம் நன்கு உணர்ந்துள்ளது.

எனவே இப்போதைக்கு, கனடா மேற்கொண்டு வரும் விசாரணையின் இறுதி வரை வரை அமெக்காவும் மற்ற மேற்குலக நாடுகளும் பொறுத்திருந்து கவனிப்பதைத் தவிர வேறு நிலை எடுக்க வாய்ப்பில்லை.

கனடாவின் உளவுத் துறைக்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பாகத் தெரிந்த தகவல்களை சில நட்பு நாடுகளுக்கு கனடா அரசு தற்போது வழங்கலாம். அதில், இந்தப் படுகொலையில் இந்தியாவின் பங்கு இருக்கிறதென்பது உறுதிப்படுத்தப்பட்டால் மேற்குலகின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

அப்படி நடந்தால், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள், இந்தியாவை ஆதரிப்பதா அல்லது கனடாவை ஆதரிப்பதா என்ற இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். சட்டத்தை ஏற்பது மற்றும் நடைமுறை அரசியலின் கடினமான தேவையை ஆதரிப்பது என்ற இரண்டு விஷயங்களுக்கு இடையே எதைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் அந்நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் எழும்.

கடந்த காலங்களில், ரஷ்யா, ஈரான் அல்லது சவுதி அரேபியா போன்ற நாடுகள் வெளிநாட்டவர்களைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவங்களின் போது மேற்கத்திய நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்தப் பட்டியலில் இந்தியா சேருவதை இப்போது மேற்குலகம் விரும்பவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.