;
Athirady Tamil News

சீக்கிய தலைவர் படுகொலை விவகாரம்: கனடாவிற்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா !!

0

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் குலைந்துள்ள நிலையில் கனேடிய மண்ணில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கிய ஆர்வலர் படுகொலை செய்யப்பட்ட விடயம் குறித்து அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனிடமும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிடமும் கனடா முறையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குப்பின்னால் இந்தியா இருந்ததான கனடாவின் குற்றச்சாட்டு, தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை குலைத்துள்ளது.

இரண்டு நாடுகளுமே தத்தமது நாடுகளில் பணியாற்றும் மற்றைய நாட்டின் மூத்த தூதர்களை வெளியேற்றி, தமது உறவுகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடைய ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணைகளில் அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு கனடாவுக்கு உதவி செய்து வருவதாகவும் இந்த கொலைகுறித்து தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை கனடா அமெரிக்காவிடம் பகிர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய முகவர்கள் தான் இந்த கொலையை செய்ததாக கனடா குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இந்தியா இதனை மறுக்கும் நிலையில் இந்த விடயத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விடயம் குறித்து கருத்துகூறிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கனேடிய பிரதமர் ட்ரூடோவின் இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் கனடாவுடன் அமெரிக்கா இந்த விடயத்தில் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன கனடா நடத்தும் விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது முக்கியமானதெனவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.