சீன ஆராய்ச்சிக் கப்பல் விஜயம்: இலங்கைக்கு அதிகரிக்கும் அழுத்தம்
தமது சொந்த புவிசார் அரசியல் கரிசனை தொடர்பான விடயங்கள் தொடர்பில் நேரடி உரையாடலை மேற்கொள்ளுமாறு இலங்கை அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை விடுத்து மூன்றாம் தரப்பு கரிசனைகளை எழுப்ப வேண்டாம் என்றும் இலங்கை குறித்த நாடுகளிடம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமீப காலங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் மற்றும் ஜப்பானிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தரப்பு கரிசனை
இந்த நாடுகள் எந்தவொரு விடயத்திலும் தங்கள் கரிசனைகளை நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று சப்ரி கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஷி யாங் 6 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலின் திட்டமிட்ட விஜயம் தொடர்பாக இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய முத்தரப்பு அழுத்தத்தில் இலங்கை தற்போது உள்ளது.
நவம்பர் மாதம் வரை இந்த கப்பல் பயணத்தை ஒத்திவைக்க இலங்கை விரும்பினாலும், ஒக்டோபரில் கப்பல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.