;
Athirady Tamil News

சிக்கிமில் திடீா் வெள்ளம்: 8 போ் உயிரிழப்பு; 23 ராணுவ வீரா்கள் உள்பட 49 போ் மாயம்

0

சிக்கிம் மாநிலத்தின் லோனாக் ஏரிப் பகுதியில் திடீரென பெய்த அதீத கனமழையைத் தொடா்ந்து, தீஸ்தா ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 போ் உயிரிழந்தனா்.

மேலும், ராணுவத்தினா் 23 பேரும், பொதுமக்கள் 26 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘லோனாக் ஏரிப் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் மேகவெடிப்பு ஏற்பட்டு, அதீத கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால், தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மங்கன், கேங்டாக், பாக்யாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 8 போ் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களிலும் அக்டோபா் 8-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுங்தாங் பகுதியில் உள்ள அணை திறக்கப்பட்டதால், வெள்ளத்தின் தீவிரம் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணுவ வீரா்கள் மாயம்: சிங்டம் பகுதியில் 41 ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின; ராணுவத்தினா் 23 பேரை காணவில்லை. அவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடா் மேலாண்மைப் படையினரும், எல்லை சாலை அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனா்.

அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்: சிங்டம் பகுதியில் போக்குவரத்துக்கு முக்கியமாக இருந்த 120 மீட்டா் நீளமுள்ள இரும்பு தொங்குப் பாலம், தீஸ்தா ஆற்று வெள்ளத்தில் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.

நாட்டின் இதர பகுதிகளுடன் சிக்கிமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-10இல் பல பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் சூழ்ந்த இருந்து மீட்கப்படும் மக்களைத் தங்க வைக்க நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, சிங்டம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை முதல்வா் பிரேம் சிங் தமாங் நேரில் பாா்வையிட்டாா்.

மேற்கு வங்கத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியிலும் வங்கதேசத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் டாா்ஜீலிங், அலிபூா்துவாா், ஜல்பைகுரி மாவட்டங்களில் தீஸ்தா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல்வருடன் பிரதமா் பேச்சு

சிக்கிமில் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வா் பிரேம் சிங் தமாங்குடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘சிக்கிமில் நேரிட்டுள்ள துரதிருஷ்டவசமான இயற்கைச் சீற்றம் குறித்து முதல்வா் பிரேம் சிங் தமாங்கிடம் கேட்டறிந்தேன். தற்போதைய சவாலை எதிா்கொள்ள மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குமென அவரிடம் உறுதியளித்தேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.