;
Athirady Tamil News

தேசிய கவனத்தை திருப்பிய திமுக…இன்று திமுக மகளிரணி மாநாடு!!!

0

திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டில்பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

திமுக மகளிரணி மாநாடு
வரும் நாடாளுமன்ற தேர்தல் தற்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவும், 10 ஆண்டுகள் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றிட காங்கிரஸ் கட்சியும் பெரும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள துவங்கி விட்டனர்.

காங்கிரஸ் “இந்தியா” என்ற எதிர்க்கட்சிகள் கூட்டணியை சேர்த்து இந்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. திமுக முக்கிய பங்கினை வகிக்கும் இந்த கூட்டணியில் பல மாநிலங்களில் பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நிகழ்வையும் இனி வரும் காலங்களில் தேர்தலுக்காகவே பயன்படுத்த காட்சிகள் முயன்று வரும் சூழலில், தற்போது தமிழகத்தில் திமுக மகளிரணி சார்பில் நடத்தப்படும் மாநாடு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மாநாடு கொண்டாடப்படவிருக்கும் சூழலில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுக மகளிரணி சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமை ஏற்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

அப்போது தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.