;
Athirady Tamil News

“Indian Super Women” கேரள பெண்களைப் பாராட்டிய இஸ்ரேல் – எதற்காக தெரியுமா?

0

கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்த சபிதா மற்றும் கோட்டையம் பகுதியை சேர்ந்த மீரா ஆகியோர் இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் உள்ள கிபுட்ஸ் கிராமத்தில் தங்கி வயதான யூத தம்பதியை கவனித்து வந்தனர். இந்த சூழலில் தான் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதனால், வயதான தம்பதியை கவனித்து வந்த கேரள பெண்களான சபிதாவும், மீராவும் செய்வதறியாது கலங்கி போயினர். கடந்த அக்.7ஆம் தேதி அதிகாலை நேரத்தில் திடீரென அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால், இருவரும் பதற்றமடைந்தனர்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே அறிந்திருந்தாலும் கூட, தாங்கள் பராமரித்து வந்த முதிய தம்பதியை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற அச்ச உணர்வு அவர்களுக்குள் தலைதூக்கியது. தொடர்ந்து, வீட்டின் 2 முக்கிய கதவுகளையும் பூட்டி விட்டு, வயதான தம்பதியுடன் இருவரும் பாதுகாப்பு அறைக்கு சென்று தஞ்சமடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் சரமாரியாக துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், காலை ஏழரை மணியளவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் அந்த வீட்டின் இரு கதவுகளும் உடைக்கப்பட்டதாகவும் சபிதா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளால் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சரமாரியாக சுட்ட போதிலும் அவர்கள் இருந்த பாதுகாப்பு அறையின் கதவை தகர்க்க முடியவில்லை. தங்களின் உயிரையும், முதிய தம்பதியின் உயிரையும் பாதுகாக்க, கேரள பெண்கள் இருவரும் இரும்புக் கதவின் கைப்பிடியை விடாமல் பிடித்துக் கொண்டே நின்றுள்ளனர். கொஞ்சம் அசந்தாலும் ஹமாஸ் குழுவினர், பாதுகாப்பு அறைக்குள் நுழைந்து விடுவார்கள் என்ற நெருக்கடியான தருணத்தில், கேரளப் பெண்கள் தடுப்பு அரண் போல் கதவைக் காத்து நின்றனர். சுமார் 5 மணி நேர தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவம் கிபுட்ஸ் கிராமத்திற்கு வந்து, ஹமாஸ் குழுவினரை விரட்டி அடித்தது. தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் யூத தம்பதியையும், கேரள செவிலியர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தது. பதற்றமான சூழலில், 4 உயிர்களைக் காப்பாற்றிய, பாதுகாப்பு அறையின் இரும்புக் கதவு, கேரள பெண்கள் நடத்திய வீரப் போராட்டத்தின் சாட்சியாக காட்சியளிக்கிறது.

இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் சபிதாவின் அனுபவத்தை பகிர்ந்து, அவர்கள் இருவரையும் “இந்தியன் சூப்பர் வுமென்” என பாராட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.