தனியார் துறையினருக்கும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை
வரவு செலவுத் திட்டத்தில் தனியார்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 20000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
அவ்வாறான கொடுப்பனவு வழங்கப்படாவிடின் அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க நேரிடும் என அனைத்து தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தின் முன் வந்து நாட்டில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவற்றவர்களாக உள்ள தோட்டத் தொழிலாளர்கள்
அத்துடன் இலங்கை பெருந்தோட்ட சேவைகள் சங்கத்தின் பிரதி தலைவர் எஸ்.சந்திரன் கூறுகையில், இலங்கையில் மிகவும் ஆதரவற்றவர்களாக தோட்டத் தொழிலாளர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்தபட்ச கொடுப்பனவாக 2000 ரூபாவை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, 20,000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (10.11.2023) பத்தரமுல்லை செத்சிரிபாயவுக்கு முன்பாக வர்த்தக சங்கங்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.