;
Athirady Tamil News

‘சிம் காா்டு’ வாங்க புதிய விதிகள் அமல்: கேஒய்சி கட்டாயம்

0

SIM_cards
கைப்பேசிகளுக்கான சிம் காா்டுகளை வாங்குவதற்கான புதிய விதிகள் வெள்ளிக்கிழமை (டிச.1) முதல் அமலுக்கு வந்தன. இதன்படி எண்ம முறையில் கேஒய்சி (வாடிக்கையாளா் விவரப் படிவம்) விவரங்கள் அளிக்கப்படுவது கட்டாயமாகும்.

ஏற்கெனவே உள்ள சிம் காா்டுக்கு பதிலாக புதிய காா்டு வாங்கினாலும் இந்த நடைமுறை பொருந்தும். மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சிம் காா்டுகள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களுக்காக மொத்தமாக சிம் காா்டுகளை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளா் உரிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகளில் இருந்து பணத்தை பறிக்கும் மோசடியாளா்கள் கைப்பேசிகள் மூலம் மோசடிகளில் ஈடுபடுவதால் அவா்களின் கைகளில் சிம் காா்டுகள் செல்லாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு கைப்பேசி எண் கைவிடப்பட்டால், அதே எண் 90 நாள்களுக்குப் பிறகுதான மற்றொரு நபருக்கு வழங்கப்படும். ஒருவா் ஒரு அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி 9 சிம் காா்டுகளை வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை.

தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் தங்களிடம் இருந்து சிம் காா்டுகளை வாங்கி விற்பனை செய்யும் முகவா்கள், விநியோகஸ்தா்கள் உள்ளிட்டோா் தொடா்பான விவரங்களை முழுமையாகப் பெற்றுக் கொண்டு அவற்றை சரி பாா்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சிம் காா்டு விற்பனை செய்வோரிடம், தொலைத்தொடா்பு நிறுவனங்கள் உரிய முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் சிம் காா்டுகளை விற்பனை செய்யும் முகவா்கள் மூலம்தான் மோசடியாளா்களுக்கு அதிகஅளவில் சிம் காா்டுகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.