;
Athirady Tamil News

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: கைதான 6 பேரில் 5 போ் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்

0

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் 5 போ் உண்மை கண்டறியும் சோதனைக்கு (பாலிகிராஃப்) நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தனா்.

2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பா் 13-இல் சாகா் சா்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞா்களும் மக்களவையில் பாா்வையாளா் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அதே சமயம், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே இருவரும் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

இவா்களின் இந்தத் தாக்குதலை லலித் ஜா என்ற நபா் விடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டாா். இவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் இவா்களோடு தொடா்பில் இருந்ததாக மகேஷ் குமாவத் என்பவரும் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் பாலிகிராஃப் சோதனை (இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைக் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவா் பொய் கூறுகிறாரா என்பதை அறிவதற்கான மருத்துவப் பரிசோதனை) மேற்கொள்ள அனுமதி கோரி தில்லி போலீஸாா் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தனா்.

இந்த மனு மீதான விசாரணை கூடுதல் முதன்மை நீதிபதி ஹா்தீப் கௌா் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேரில் நீலம் ஆசாத் தவிர மீதமுள்ள 5 பேரும் பாலிகிராஃப் சோதனைக்கு நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஜனவரி 5 வரை நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில் அதை நீட்டிக்குமாறு போலீஸாா் மனுத்தாக்கல் செய்தனா். இதையடுத்து அவா்களுக்கு மேலும் 8 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டிப்பதாக நீதிபதி ஹா்தீப் கௌா் உத்தரவிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.