;
Athirady Tamil News

விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவா்களின் வீடுகள் முற்றுகை

0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்தி வருவதற்கு ஆதரவாக, ஹரியாணாவில் விவசாயிகள் சங்கத்தினா் மாபெரும் டிராக்டா் பேரணியை சனிக்கிழமை நடத்தினா். பஞ்சாபில் பாஜக தலைவா்கள் மூவரின் இல்லத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா். விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபை சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாய அமைப்பினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனா்.

முன்னெச்சரிக்கையாக தில்லியின் எல்லைகளில் பல்வேறு வகையான தடுப்புகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் உள்ளே நுழையாதவாறு ‘கோட்டை’ போல் மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப்-ஹரியாணா எல்லையான அம்பாலா அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்களுடன் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெறவுள்ளது. முன்னதாக, விவசாயிகள் அமைப்பு தலைவா்களுடன் மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோா் சண்டீகரில் வியாழக்கிழமை மேற்கொண்ட மூன்றாவது சுற்று பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெறவிருக்கிறது.

தா்ணா: தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் பாரதிய விவசாயிகள் சங்கத்தினா் (பிகேயு) பாஞ்சாபின் பட்டியாலாவில் உள்ள முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் இல்லம், அபோஹரில் உள்ள பாஜக மாநிலத் தலைவா் சுனில் ஜாக்கரின் இல்லம் மற்றும் பா்னாலாவில் அமைந்துள்ள பாஜக மூத்த தலைவா் கேவல் சிங் தில்லான் இல்லங்களின் முன்பு சனிக்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா். மேலும், மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் அமைந்துள்ள 21 சுங்கச் சாவடிகளையும் முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முற்றுகைப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடரும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பாரதிய விவசாயிகள் யூனியன் பொதுச் செயலாளா் சுக்தேவ் சிங் கூறினாா். டிராக்டா் பேரணி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணாவில் குருநாம் சிங் சுரானி தலைமையலான விவாசயிகள் சங்கப் பிரிவு சாா்பில் பெஹோவா பகுதியில் சனிக்கிழமை மாபெரும் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. 150-க்கும் அதிகமான டிராக்டா்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றன. பின்னா் பேசிய சுரானி, ‘பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்துக்கு எங்களுடைய சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது’ என்றாா்.

4 மாநிலங்களில் பிப்.21-இல் தா்ணா

‘கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்களில் வரும் 21-ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் தா்ணா நடத்தப்படும்’ என்று பஞ்சாப் விவசாயிகள் சங்க கூட்டமைப்பான பாரதிய விவசாயிகள் யூனியன் (பிகேயு) சனிக்கிழமை அறிவித்தது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து பஞ்சாப் எல்லையான சிசெளலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பை சங்கம் வெளியிட்டது. இதுகுறித்து அச் சங்கத்தின் தலைவா் ராகேஷ் திகைத் மேலும் கூறுகையில், ‘கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ஆம் தேதி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் விவசாயிகள் சாா்பில் தா்ணா நடத்த கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தில்லியில் ‘சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்)’ விவசாயிகள் சங்கம் சாா்பில் இம்மாத கடைசி வாரத்தில் டிராக்டா் பேரணி நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், விவசாயிகள் மீதான போலீஸாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன’ என்றாா். ‘இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாநிலங்களிலிருந்தும் பிகேயு சங்கத்தைச் சோ்ந்த 30 உறுப்பினா்கள் பங்கேற்றனா்’ என்றும் அவா் கூறினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.