;
Athirady Tamil News

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது

0

மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (15) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நேற்று  (20) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30 26 22 23 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.

அத்துடன் கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்ததுடன் நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் பின்னணி

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல என கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.