;
Athirady Tamil News

கூவத்தூரில் சம்பவம் நடந்ததா? – ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி அதிமுக நிர்வாகி வெங்கடாச்சலம் வழக்கு

0

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கூவத்தூர் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாகவும், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகவும் தெரிவித்திருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூவுக்கு எதிராக, சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென தங்களது பொதுச்செயலாளர் ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளதாகவும், அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்த ஏ.வி. ராஜூ இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு என்று பிரத்யேகமாக பெண்கள் ஆதரவு இருந்ததாகவும், ராஜூவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ராஜூவின் இந்த பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ராஜூவின் பேச்சை நீக்க வேண்டுமென கூகுள் மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.