;
Athirady Tamil News

சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியது அல் அமானா நற்பணி மன்றம்!

0

சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்றத்தினால் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வும், மன்றத்தின் ஒன்றுகூடலும், ஊடக சந்திப்பும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி அவர்களது தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள அமைப்பின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.

இங்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த சகோதரி ஒருவரின் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தேவைக்காக ஒருதொகை நிதியை அவரது உறவினரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அல் அமானா நற்பணி மன்றத்தின் செயற்பாடுகள் அதன் உருவாக்கம் தொடர்பில் விரிவாக அமைப்பின் தலைவர் எடுத்துரைத்தார்.

1986 ஆம் ஆண்டு அன்ஸாரிகள் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, அந்த சங்கத்தினூடாக மீனவர்களின் இழப்புக்கள் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட (கடல் பேரலை) சுனாமியின் பின்னர் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் அந்த மக்களுக்கு உதவுவதற்காக அன்ஸாரிகள் சங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம் என்ற பெயரில் உருமாறி மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு உதவியதாகவும் தெரிவித்தார்.

காலப்போக்கில் மக்களின் தேவைகள் அதிகரித்துச் சென்றதன் காரணமாகவும் அரசாங்கம் மற்றும் உதவு நிறுவனங்களிடம் மக்களின் பிரச்சனைகளை கொண்டுசெல்ல பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் தேவை உணரப்பட்டதால் அப்போதைய பிரதேச செயலாளரின் உதவியுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு அல் அமானா நற்பணி மன்றம் என்ற பெயரில் மன்றம் பதிவு செய்யப்பட்டு மிகுந்த வீரியத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி, மிகக்குறுகிய நிலப்பரப்புக்குள் வாழும் சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் சுனாமி கடல் பேரலையின் காரணமாக தாங்கள் வாழ் இடங்களை இழந்து தவித்தபோது அரசு ஊரின் மேற்குப் புறமாகவுள்ள காணிகளை சுவீகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடுகளை பெறவில்லை குறித்த பாதிக்கப்பட்டோர் ஸ்தாபிக்கப்பட்ட புதிய குடியிருப்புக்களை அண்டிய பிரதேசங்களில் காணிகளை சிறு சிறு துண்டுகளாக கொள்வனவு செய்து அவர்களது வாழ்விடங்களை அமைத்துள்ளனர்.

இவ்வாறான மக்களின் பிரதான தேவைகளான வீதி அமைத்தல் உட்கட்டமைப்புகளுக்கு உதவுதல் மற்றும் வாழ்வாதாரத்துக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மக்கள் நல திட்டங்களை கொண்டு செல்வதில் தாங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் அவைகள் தேவையுடைய மக்களின் நீதியான போராட்டம் காரணமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதன்போது வீதிகளுக்கு பெயர்களை வைப்பது தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.

நிகழ்வின்போது அமைப்பின் செயலாளர் எம்.எஸ். முபாறக், பொருளாளர் ஏ.சி.எம். பளீல், ஆலோசகர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் உள்ளிட்டவர்களுடன் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எஸ்.எச். ஆதம்பாவா (ராசாதி) அவர்களும் உரையாற்றினர். நிகழ்வில் மன்றத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.