;
Athirady Tamil News

பிரித்தானியாவில் இத்தனை மில்லியன் மக்கள் பண நெருக்கடியிலா… எச்சரிக்கும் முக்கிய அமைப்பு

0

பிரித்தானியாவில் சாதனை எண்ணிக்கையில் பல மில்லியன் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

திவாலானவர்களின் எண்ணிக்கை
விலைவாசி உயர்வு மிக அதிக எண்ணிக்கையிலான குடும்பத்தினரை கடனில் தள்ளியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Debt Justice என்ற அமைப்பு முன்னெடுத்துள்ள ஆய்வில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 13 சதவிகித மக்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை செலுத்த வேண்டிய தொகையை தவறவிட்டுள்ளதாகவும்,

18 முதல் 24 வயதுடையவர்களில் 29 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும் கால் பங்கு பேர்கள் 25 முதல் 34 வயதுடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, கடன் சிக்கலில் இருந்து மீள உரிய ஆலோசனை கோரும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றே Debt Justice அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெள்ளியன்று வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களில், திவாலானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிசக்தி கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் இருந்து சரிவை சந்தித்திருந்தாலும், வாடகை வீட்டுக்கான கடன் உள்ளிட்டவை மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதுவே குடும்பங்களின் நிதிநிலையை பற்றாக்குறைக்கு தள்ளுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 10,136 பிரித்தானியர்கள் திவாலானதாக அறிவித்துள்ளனர். 2022 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவிகிதம் அதிகம் என்றே கூறப்படுகிறது.

கடனில் தத்தளிக்கும் சாதாரண மக்கள்
இந்த எண்ணிக்கையில் 709 பேர்கள் கடன் தீர்க்க முடியா நிலை என அறிவிக்கப்பட்டவர்கள். 6,420 பேர்கள் தங்கள் கடனில் குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம் என உறுதி அளித்துள்ளவர்கள்.

3007 பேர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 30,000 பவுண்டுகளுக்கும் குறைவாக கடன் சுமை இருப்பவர்கள், தங்கள் சேமிப்பில் 2,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வைத்திருப்பவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடனில் தத்தளிக்கும் சாதாரண மக்களை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடன் தொகைக்காக மிரட்டி அவமானப்படுத்தப்படும் நிலையில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும் Debt Justice என்ற அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.