;
Athirady Tamil News

இலங்கைக்கு அழைத்த ரணிலுக்கு நன்றி தெரிவித்த ஈரான் ஜனாதிபதி

0

இலங்கைக்கு வருகைத் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எனக்கு விடுத்த அழைப்புக்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) தெரிவித்துள்ளார்.

மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவின் அடையாளம்
இந்த நிகழ்வின் போதே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பின் அடையாளமாக விளங்கும் இந்நிகழ்வில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் என்றே கூற வேண்டும்.

இந்த அற்புதமான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கிறோம். ஆனால், நமது இரு நாடுகளுக்கும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பவற்றை உறுதி செய்வதே இங்கு மிக முக்கியமான விடயம் என்று நான் நம்புகிறேன்.

மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை விட நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களின் விருப்பமும் உறுதியும் முக்கியமானது என்று கூற வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே, ஈரான் இஸ்லாமிய குடியரசிடம் உள்ள நவீன தொழில்நுட்ப அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக கடந்த 45 வருடங்களில் ஈரான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இலங்கையுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னோக்கிச் செல்ல ஈரான் தயாராக இருப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.

இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்க ஈரான் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.