மசூதி ஆய்வால் வன்முறை; நீடிக்கும் பதற்றம், இன்டர்நெட் தடை – என்ன நடந்தது?
மசூதி ஆய்வின் வன்முறையால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
உத்தரபிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. இது 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக மது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினர் முன்னிலையில் நீதிமன்ற ஆணையர் மசூதியில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அறிக்கை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக நீதிமன்ற ஆணையர் ஆய்வுக்கு சென்ற போது, அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர். 30 போலீஸார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல், சோடா பாட்டில், வெடிக்க கூடிய பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் அதிகாரிகள் இன்று சமர்பிக்கின்றனர். இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜன., 29க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.