சிறுதானிய சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாறவேண்டும்!

இயற்கையின் நண்பர்கள் இயக்கம் ஏற்பாட்டில் கைதடி சைவ ஐக்கிய சங்க வளாகத்தில் அண்மையில் சிறுதானியப் பொங்கல் இடம்பெற்றிருந்தது. அதில் கைதடி சிறுவர் கழக உறுப்பினர்களும் இயற்கையின் நண்பர்கள் இயக்கத்தினரும் கலந்துகொண்டார்கள்.
அதில் இயற்கையின் நண்பர்கள் இயக்கத்தின் செயலாளர் தனபாலசிங்கம் துளசிராம் கருத்து தெரிவிக்கையில்
ஆதியிலிருந்தே நவீன விவசாயத்துறைக்கு சொந்தம் கொண்டாடும் நாம் அன்றைய ஆசியாவின் நெற்களஞ்சியம் என அழைக்கப்பட்டதை அறிவோம்.
எமது மூதாதையர்கள் கூறிய அறிவுடன் உசிதமான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்தோம். ஆனால் தற்போதைய இலங்கை விவசாயத்துறை தேசிய விழுமியங்களையும் விஞ்ஞான தொழில்நுட்பங்களையும் ஒன்றிணைத்து முன்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாம் அரிசியில் தன்னிறைவடைந்துள்ளதைப் போன்று ஏனைய உணவுப்பயிர்களின் தேவையிலும் தன்னிறைவடைய வேண்டியுள்ளது.
எமது உள்ளூர் தானிய வகைகளான திணை, குரக்கன் போன்றவை பாவனையிலிருந்து சிறிது சிறிதாக அகன்று செல்வதைக் காணக்கூடியதாக உள்ளதுடன் இவ்வாறான சிறுதானியங்களை சிறு தொகையினரே நுகர்கின்றனர். அதிகளவான போசணைகளை கொண்ட இவ்வாறான சிறு தானிய வகைகளை உண்பதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பேணி வருவதுடன் தற்போது சமூகத்தில் காணப்படுகின்ற நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்ற நோய்களுக்கு சரியான தீர்வாகும்
மேலும் வவுனியா மாவட்டத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்துச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட மஞ்சள் நோய் தாக்கத்தினால் உளுந்து செய்கையில் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் அதனை கட்டுப்படுத்த ஏதுவான முறைகள் இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
உளுந்துக்கு விலை நிர்ணயம் இல்லாமையாலும் தாம் செலவுசெய்யும் பணத்தைகூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படும் நிலையில் இவ்வாறு நோய் தாக்கங்களும் தொடர்ந்து வருவதனால் நாம் எதிர்வரும் காலங்களில் உழுந்துச் செய்கையை கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலை தொடராது இருக்கவும் விவசாயிகளது வாழ்வு ஓளிமயமாகவும் சிறுதானிய பயிர் செய்கையை ஊக்குவிக்கவும் 2009 முன்னர் வடக்கில் கூட்டுறவு ஊடாக தானியங்களை கொள்வனவுசெய்து சந்தைபடுத்தும் நடமுறை சிறப்பாக இயங்கியபோல் மீண்டும் அவ் நடமுறையை இயங்கு நிலைக்கு கூட்டுறவு சங்கங்கள் கொண்டுவருவதன் மூலம் சிறுதானிய சந்தை விலையை தீர்மானிக்கும் சக்கதியாக கூட்டுறவு மாறமுடியும் எனவும் குறிப்பிட்டார்.