நீதியின் காவலனஇளஞ்செழியனுக்கு அநீதி – அனுர அரசு திட்டமிட்டு புறக்கணிப்பு என தீவகம் சிவில் சமூகம் குற்றச்சாட்டு!
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நீதிபதி இளஞ்செழியனுக்கும் இந்நாட்டின் மக்களுக்கும்
திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (22.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் தீவகம் சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் நாவலன் மேலும் கூறுகையில் –
இலங்கையின் தலை சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தற்துணிவாக அதிரடி தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காது பழிவாங்கியுள்ளது. இதை ஏற்க முடியாது.
நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் மாவட்ட நீதிபதியாகவும் , மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கையின் அனைத்து இன மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே அவரது துணிச்சலை பாராட்டி அமெரிக்க அரசு தமது நாட்டுக்கு அழைத்து உயர் கௌரவத்தினை வழங்கியிருந்தது. இவ்வாறான விருது பெற்ற ஒரேயொரு இலங்கை நீதிபதியாக மாண்புமிகு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்றுவரை விளங்குகின்றார் .
ஆனால் அவருக்கான பதவி உயர்வுகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது மகிந்த ராஜபக்ச , கோத்தபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்கழிக்கப்பட்டு வந்தது.
இதன் உச்சமாக தற்போது அனுரகுமார அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்தும் திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது.
குறிப்பாக மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சங்க தலைவராக தொடர்ச்சியாக இரு தடவைகள் இறுதிவரை தெரிவுசெய்யப்பட்டவர் மா. இளஞ்செழியன். ஆனாலும் அவரை விடவும் சேவை மூப்பின் அடிப்படையில் இளையவர்களாக காணப்படுகின்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நால்வர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி அநுரகுமாரவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நீதிபதி இளஞ்செழியனும் அப்பதவிக்கு நியமிக்கப்படுவாரென்று அரசாங்கத்தினால் உறுதி வழங்கப்பட்டபோதிலும் வழமைபோன்று அந்த உறுதிமொழி தூக்கியெறியப்பட்டுள்ளது . கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான சிறீலங்கா இராணுவத்தினரின் வன்முறை செயற்பாடுகளுக்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற அதிகபட்ச தண்டனைகளை நீதிபதி இளஞ்செழியன் வழங்கியிருக்கின்றமையும் இப்பழிவாங்கலின் பிரதான காரணமாக இருக்கலாம்.
அதேபோன்று கடந்த வாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நான்கு பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட போதிலும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவேண்டிய. இஸ்லாமியர் ஒருவர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அநியாயங்களை எமது நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
அந்தவகையில் அரசு குறித்த பழிவாங்கலை கைவிட்டு நீதியின் காவலனாக தமிழ் பேசும் மக்கள் கருதுகின்ற மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
இதேநேரம் அவ்வாறான சூழலை அரசு உருவாக்காது விட்டால் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும் எனவும் திரு. கருணாகரன் நாவலன் தெரிவித்தார்.
..
இந்நிலையில் குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் கூறுகையில் –
கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஜேவிபி மேற்கொண்ட இனவாத செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.
அதே நேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை.
அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் சிறீலங்கா என்று கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றனர் . அவர்கள்
மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகின்றது.
ஆனால் ஆட்சியை கைப்பற்றுவதற்கு அனுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அத்துடன் தென்பகுதியைப் போன்று தமிழ் மக்களையும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பதவிநிலைகளில் பாரபட்சம் பாராது நியமிக்க வேண்டும்.
இதேவேளை யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்மாற்றம் குறித்து விந்தன் கனகரத்தினம் கூறுகையில் –
யாழ் கலாசார மத்திய நிலையமானது ஈ.பி.டி.பி யாழ் மாநகரை ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் ஒரு குறியீடாக இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணம் செய்யப்பட்டது.
இது அன்று யாழ் மாநகரசபையை ஆட்சி செய்த ஈ.பி.டி.பியினர் பிரேரணையாக கொண்டுவந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சியாக இருந்தும் கூட அந்த முயற்சி எமது மக்களின் கலாசாரத்தை கொண்டதாக இருந்தமையால் அதனை முழுமையாக ஆதரித்து வரவேற்றிருந்தோம்.
ஆனால் இன்று அதன் பெயர் மாற்றப்படுள்ளது வருத்தமளிக்கின்றது.
இதேவேளை இது தமிழ் மக்களின் கலாசாரத்தை சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுக் கூடமாகும்
இந்த பெயர் மாற்றம் இந்திய அரசின் செயற்பாடாகவோ அல்லது அரசின் செயற்பாடாகவோ இருந்தாலும் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
இதைவிட தமிழுக்கு கடைசி நிலை வழங்கப்பட்டமை மற்றும் அந்த சம்பவம் திரை நீக்கம் செய்யும்போதே தனக்கு தெரியும் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தமை போன்றன வேதனையான விடயங்களென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.