;
Athirady Tamil News

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?

0

டேராடூன்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக்கிய சேவக் சதன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், உத்தரகண்ட் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டத்தின் அரசாணையை வெளியிட்டதோடு, பொது சிவில் சட்ட விதிகளை அறிமுகம் செய்தார். பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது தொடர்பான இணையதளத்தையும் நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது, எந்தவொரு மதத்தினரையும் குறிவைத்து அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இது அனைத்து மோசமான பழக்க வழக்கங்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு சட்ட கருவி. அவ்வளவுதான்.

பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரான சமத்துவமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும். உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்திருப்பதால், பலதார மணம், ஹவாலா நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்படும். அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் பொருந்தும் என்பதால், பலதார மணம் ஒழிக்கப்படுவதோடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமைக்கும் வழி வகுக்கப்படும். இவ்வாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசினார்.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், உத்தராகண்டில் கடந்த 2022-ல் நடந்த பேரவைத் தேர்தலின்போது, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்நிலையில், தற்போது பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியிருக்கிறது.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதா, உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், சட்ட அமலாக்கத்துக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க முன்னாள் தலைமைச் செயலர் சத்ருஹன் சிங் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தராகாண்ட் பெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.