;
Athirady Tamil News

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

0

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியர்கள் 104 பேர் அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானத்தில் அழைத்து வந்த போது, கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தியர்களை ஏலியன் எனக் குறிப்பிட்டு, கை, கால்களில் விலங்கிடப்பட்டிருக்கும் விடியோவை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதாக நேற்று புகைப்படங்கள் வெளியான நிலையில், அதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்து, அந்தப் புகைப்படங்கள் போலியானது என்று செய்திகளும் வெளியான நிலையில், அது தொடர்பான விடியோவையை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும், தங்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்கள். இந்தியா திரும்பியபோது, எங்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு இருந்ததாகவும், பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தோம். விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகுதான் எங்கள் கால்களில் இருந்த சங்கிலி அகற்றப்பட்டது என்றும் பலரும் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவிலிருக்கும் வேறொரு முகாமுக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவோம் என்று நினைத்திருந்ததாகவும், செய்திகள் மூலமாகத்தான் தாங்கள் இந்தியா அழைத்து வரப்படுவதையே அறிந்துகொண்டோம் என்றும் சிலர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தியர்களுக்கு கைவிலங்கு இட்டதாக வந்த தகவல்களை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்ததோடு, இந்த புகைப்படங்கள் அகதிகளை குவாத்தமாலா பகுதிக்கு நாடு கடத்தும்போது எடுத்தப் புகைப்படங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மத்திய அரசு தரப்பில் விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மதியம் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கமளிக்கவிருக்கிறார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலயைத்துக்கு வந்தடைந்தனர்.

இந்த விவகாரத்தில், இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்படும் படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.