ஐரோப்பாவிற்கு புலம்பெயர சென்ற 16 பாகிஸ்தானியர்கள் மரணம்! உயிர்தப்பிய 37 பேர்

ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருந்து படகில் ஐரோப்பாவிற்கு பயணித்தவர்கள் விபத்தில் சிக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
16 பேர் மரணம்
லிபியா கடற்கரையில் வார இறுதியில் ஐரோப்பாவிற்கு சென்ற டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பலியான 16 பேர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் 10 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இந்த விபத்தில் உயிர் பிழைத்த 37 பேரில், 33 பேர் லிபிய பொலிஸ் காவலில் இருந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. படகில் 65 பேர் இருந்ததாக மதிப்பிடப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ராமில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
ஷெபாஸ் ஷெரீப் வருத்தம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு நகரமான ஜாவியாவில் உள்ள மார்சா டெலா துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் காணாமல் போனவர்களுக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் செயல்முறையை முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவும், மனித கடத்தல் போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.