தில்லியில் நிலநடுக்கம்.. திடீரென பூமி குலுங்கினால் என்ன செய்ய வேண்டும்?
தலைநகர் தில்லியில் இன்று காலை 5.30 மணிக்கு திடிரென நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.0 ஆகப் பதிவானாலும், நிலநடுக்கத்தின் அதிர்வு கடுமையாக உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லியில், மக்கள் உறக்கத்தில் இருந்தபோது, நில அதிர்வு உணரப்பட்டதால் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.
தில்லி நில அதிர்வு காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை. ஏதேனும் அவசரம் எனில் மக்கள் 112 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வீட்டில் அவசரத் தேவைக்கு..
வீட்டில் எப்போதும் அவசரத் தேவைக்கு என முதலுதவி பெட்டகம், டார்ச் விளக்குகள் போன்றவற்றை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
லேசான நில அதிர்வுகள் உணரப்படும்போது, தேவையான குடிநீர் மற்றும் உணவுப்பொருள்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் பலமான மேஜை அல்லது படுக்கை போன்றவற்றின் அருகே உறங்கலாம், உணவருந்தலாம்.
இதுபோன்று உங்கள் வீட்டில் இருக்கும் பாதுகாப்பான இடத்தைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். நிலநடுக்கம் வரும்போது அதன் கீழே தஞ்சமடையலாம்.
வீட்டில் உள்ளவர்கள் அமர்ந்து, பாதுகாப்பான இடம், அவசர காலத்தில் வெளியேறும் வழிகள் பற்றி பேசி புரிதலை ஏற்படுத்துங்கள்.
பலமான படுக்கை அல்லது மேஜைக்கு கீழே ஒரு விரிப்பைப் போட்டு வையுங்கள். அவசர நேரத்துக்கு அதனை எடுத்து தலையில் போட்டுக்கொள்ளலாம்.
பெரிய விரிப்பு இல்லாவிட்டாலும், கைகளால் தலையை மூடியபடி பாதுகாப்பான இடத்துக்கு ஓட வேண்டும்.
ஏதேனும் மிக எடை அதிகம் கொண்ட பொருள்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். ஜன்னல், கதவுகள் போன்றவையும் மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முடியுமானால் கட்டடத்திலிருந்து வெளியேறி திறந்தவெளிப் பகுதிக்கு விரையுங்கள். அருகில் மரங்கள், மின் கம்பங்கள், பெரிய கட்டங்கள் இல்லாமல் இருக்கும் இடத்தில் நிற்பது நல்லது.
கட்டடத்துக்குள் இருந்து வெளியே ஓடும்வரை, கையால் தலையை மூடிக்கொண்டே ஓட வேண்டும்.
வாகனங்களில் இருந்தால் திறந்தவெளியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சீட் பெல்ட் அணிந்துகொள்ளுங்கள்.
ஒருவேளை நில அதிர்வு ஏற்பட்டு நின்று விட்டால், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்.
நில அதிர்வு ஏற்பட்ட பிறகு வீடுகளுக்குத் திரும்பும்போது வீட்டுக்குள் விரிசல்கள் இருக்கிறதா என்பதை பார்த்தபிறகுதான் செல்ல வேண்டும்.
நில அதிர்வு ஏற்பட்டு வெளியேறிய மக்கள், அரசு கொடுக்கும் தகவல்களை மட்டும் நம்பி அதன்படி செயல்படலாம். சமூக ஊடகத் தகவல்களை நம்ப வேண்டாம்.
இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டால் பிறகு அமைதியாக இருக்க வேண்டும்.
தேவையற்ற உறுதியற்ற தகவல்களை நம்பவோ மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம்.
கையில் கைகுட்டை போன்ற துணி இருந்தால் வாய் மற்றும் மூக்கை மறைத்துக்கொள்ளுங்கள். தூசுகளை சுவாசிக்க வேண்டாம்.
இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டால், ஏதேனும் பெரிய நீண்ட குழாய், குச்சிகள் மூலம் சமிக்ஞை காட்டலாம். கத்த முடியாவிட்டாலும் ஏதேனும் பொருள்களைத் தட்டிக்கூட சப்தம் எழுப்ப முடிந்தால் போதுமானது.
செய்யக்கூடாதவை…
நிலநடுக்கத்தின்போது ஒருவர் தன்னைக் காப்பாற்றத்தான் முயல வேண்டும். பொருள்களை அல்ல.
நிலநடுக்கத்தால் சேதமடைந்திருக்கும் சாலைகளில் வாகனங்களை இயக்கக் கூடாது.
பாலங்கள், சுரங்கங்கள், பைபாஸ் சாலைகளைத் தவிர்க்க வேண்டும்.
மின் சாதனங்கள் அருகில் செல்ல வேண்டாம்.