;
Athirady Tamil News

அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

0

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கை பின்வருமாறு,

இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) ஏப்ரல் 22 சந்தித்து கலந்துரையாடியது.

அதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் முதல் பிரதிகள் நிதியமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பிரதிநிதிகளால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் முகம்கொடுத்த சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் முகம்கொடுக்ககூடிய சவால்களை வெற்றிகொள்ளவும் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாக வழமை நிலைக்கு திருப்பவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தூதுக்குழுவினரால் தூதுவர் கிரீயருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வர்த்தக பற்றாக்குறை தொடர்பாகவும், தீர்வை வரி மற்றும் தீர்வை அற்ற தடைகளை மட்டுப்படுத்த அமெரிக்காவுடன் செயலாற்ற இலங்கை கொண்டிருக்கும் துரித மற்றும் முன்னேற்றகரமான அர்ப்பணிப்பு குறித்தும் இலங்கை தூதுக்குழு இதன்போது தெளிவுபடுத்தியது.

இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இலங்கை முன்வைத்திருக்கும் முன்மொழிவுகளை வரவேற்ற தூதுவர் கிரீயர் இரு நாடுகளுக்கும் இடையில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்த விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் தூதுவர் கிரீயரினால் நியமிக்கப்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொறுப்பான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான தூதுக்குழுவுடன் தெற்காசியாவிற்கு பொறுப்பான பணிப்பாளர் எமிலி ஏஷ்பியையும் அன்றைய தினத்திலேயே சந்தித்து கலந்துரையாடிய இலங்கைத் தூதுக்குழுவினர், இலங்கையினால் அமெரிக்காவிற்கு எழுத்து மூலம் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்தனர்.

அதன்போது இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியதோடு, மிக விரைவில் குறித்த ஒப்பந்தத்திற்கு செல்வதற்கும் இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகம், வர்த்தக பொருட்கள்,நேரடி முதலீட்டுக் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அமெரிக்க முகவர் அலுவலகத்தை (USTR) சார்ந்துள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியும் அந்நாட்டு ஜனாதிபதியின் தலைமை வர்த்தக ஆலோசகரும், இணக்கப்பாட்டாளர் மற்றும் வர்த்தக பிரச்சினைகள் தொடர்பிலான அறிவிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகிக்கும் கெபினட் உறுப்பினர் ஒருவரே மேற்படி அலுவலகத்தின் பிரதானியாவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.