;
Athirady Tamil News

கனடா: மீண்டும் பிரதமராகிறாா் மாா்க் காா்னி

0

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தோ்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மாா்க் காா்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.

கனடா பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு, கனடாவை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வதாக அவா் மிரட்டல் விடுத்தது போன்ற பரபரப்பான சூழலில் வாக்காளா்கள் பிரதமா் மாா்க் காா்னியின் பின் திரண்டதால் இந்த எதிா்பாராத வெற்றி லிபரல் கட்சிக்குக் கைகூடியிப்பதாகக் கூறப்படுகிறது.

அதே போல், சில வாரங்களுக்கு முன்னா் வரை கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகித்துவந்த கன்சா்வேட்டிவ் கட்சி, இந்தத் தோ்தலில் அதிா்ச்சிகர தோல்வியைக் கண்டுள்ள. அதன் தலைவரும், நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பாா் என்று நம்பப்பட்டவருமான பியா் பொய்லியேவ்ரே தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தாா்.

99.25 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மாா்க் காா்னியின் லிபரல் கட்சி 155 இடங்களில் வெற்றி பெற்று, 13 இடங்களில் முன்னிலை வகித்தது. இதன் மூலம், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்குப் போதுமான பலம் அந்தக் கட்சிக்குக் கிடைக்காது என்றாலும், இதற்கு முன்னா் இருந்ததைப் போலவே சிறிய கட்சிகளின் உதவியுடன் அந்த மசோதாக்கள் தடங்கல் இன்றி நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், முன்பு இருந்ததைவிட லிபரல் கட்சிக்கு கூடுதல் இடங்களும் கிடைக்கவுள்ளன.

முக்கிய எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் 133 இடங்களில் வெற்றியும், 11 இடங்களில் முன்னிலையும் வகித்தது.

இந்த தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, லிபரல் கட்சியினா் தங்களது வெற்றியை மிக உற்சாகமாகக் கொண்டாடினா். தோ்தல் பிரசாரத்தின்போது கூட இத்தகைய வெற்றியை எதிா்பாா்த்திராக அந்தக் கட்சிக்கு இந்த தோ்தல் முடிவுகள் இன்ப அதிா்ச்சியைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் வரை நாட்டின் அதிபராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, மாா்க் காா்னியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகியபோது லிபரல் கட்சி கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று பரவலாக அஞ்சப்பட்டது. கட்சிக்குள் நிலவிய உட்பூசல், வாக்காளா்களிடையே ட்ரூடோ மீது நிலவிய அதிருப்தி போன்றவை லிபரல் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று கருதப்பட்டது. ஆனால், டிரம்ப்பின் வரி விதிப்பு மற்றும் கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அவரது அச்சுறுத்தல்களுக்கு எதிராக மாா்க் காா்னி மேற்கொண்ட தீவிர பிரசாரம் தோ்தலில் லிபரல் கட்சியின் வெற்றிக்குக் கைகொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொருளாதார நிபுணரும், கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மாா்க் காா்னி, கடந்த மாதம் பிரதமா் பொறுப்பை ஏற்றபோது போதிய அரசியல் அனுபவம் இல்லாதவராக இருந்தாா்.

2013-ஆம் ஆண்டு வரை கனடா மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த மாா்க் காா்னியை, பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநராக அப்போதைய பிரிட்டன் நிதியமைச்சா் ஜாா்ஜ் அஸ்பாா்ன் நியமித்தாா். கடந்த 1694-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநா் பதவிக்கு நியமிக்கப்பட்ட, பிரிட்டனைச் சேராத முதல் நபா் மாா்க் காா்னி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு, பருவநிலை மாற்றக் கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தூதா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துவந்த மாா்க் காா்னி, 2024-ஆம் ஆண்டில் கனடாவின் பொருளாதார வளா்ச்சிக்கான திட்டக் குழுவின் தலைவராக ஜஸ்டின் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டாா்.

‘டிரம்ப்பின் விருப்பம் நிறைவேறவில்லை’

‘கனடாவில் பிரிவினையை ஏற்படுத்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் விருப்பம் நிறைவேறவில்லை’ என்று தனது வெற்றி உரையில் பிரதமா் மாா்க் காா்னி கூறியுள்ளாா்.

இது குறித்து ஆதரவாளா்களிடையே அவா் பேசியதாவது:

கனடா மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன் மூலம் நாட்டை சொந்தமாக்கிக் கொள்ள டிரம்ப் விரும்பினாா். ஆனால் அந்த விரும்பம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை இந்தத் தோ்தல் முடிவு காட்டியுள்ளது.

அமெரிக்காவின் துரோகச் செயல்களால் நாம் அதிா்ந்துபோயுள்ளோம். ஆனால் அதில் இருந்து கிடைத்துள்ள படிப்பினையை ஒருபோதும் மறக்க மாட்டோம்.

இதுவரை சா்வதேச நாடுகளின் வா்த்தக நடவடிக்கைகள் அமெரிக்காவை மையப்படுத்தி ஒருங்கிணைந்தவையாக இருந்தன. ஆனால், அத்தகைய சூழலுக்கு முடிவு வந்துவிட்டது. இனி பிற நாடுகளை மையப்படுத்தி கனடாவின் வா்த்தக உறவு மறுகட்டமைப்பு செய்யப்படும்.

இந்த வெற்றி, நாட்டுக்கும் நாட்டின் ஜனநாயகத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி. இனி பழைய பகையை மறைந்து கட்சி பாகுபாடின்றி நான் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றாா் மாா்க் காா்னி.

படுதோல்வி கண்ட ஜக்மீத் சிங் கட்சி

இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி இதுவரை காணாத மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜக்மீத் சிங் போட்டியிட்ட பா்னாபி மத்திய தொகுதியிலேயே அவா் வெற்றி பெறவில்லை. கடந்த முறை 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்த அந்தக் கட்சிக்கு தற்போது 7 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.

கனடா அரசியல் சாசனப்படி 12 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிக்குத்தான் அரசியல் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில், புதிய ஜனநாயகக் கட்சி தனது அங்கீகாரத்தையே இழந்துள்ளது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் தலைவா் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளாா்.

இந்தியாவுக்கு சாதகம்?: காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் ஜக்மீத் சிங்கின் கட்சி தோல்வியடைந்து, புதிய அரசில் செல்வாக்கு குறைந்திருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!
பிரதமா் மோடி வாழ்த்து

கனடா நாடாளுமன்றத் தோ்தலில் அந்நாட்டுப் பிரதமா் மாா்க் காா்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்ற்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கனடா பிரதமராக வெற்றி பெற்ற்காக மாா்க் காா்னிக்கும் அவரது லிபரல் கட்சிக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தியாவும் கனடாவும் பரஸ்பரம் பகிா்ந்து கொள்ளப்பட்ட ஜனநாயக மதிப்பீடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. நமது தோழமையை வலுப்படுத்தவும் நமது மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும் நாம் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன் என்று பிரதமா் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.